இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கீதை, பைபிளுடன் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்பிக்கள்

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி பொது தேர்தல் நடந்தது. இதில்,தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. புதிய பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றார். இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 பேர் எம்பிக்களாகி உள்ளனர். புதிய எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், இந்திய வம்சாவளி எம்பிக்கள் பலர் தங்கள் கைகளில் பகவத் கீதை,பைபிள் மற்றும் சீக்கிய மத நூல்களை வைத்து சத்திய பிரமாணம் எடுத்தனர். இந்தியர்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரிஷி சுனக் பதவி ஏற்றார். வலது கையில் கீதையை வைத்து கொண்டு பதவி ஏற்ற ரிஷி சுனக்,எல்லாம் வல்ல கடவுளின் மீது ஆணையாக மாட்சிமை பொருந்திய மன்னர் சார்லஸ்,அவருடைய வாரிசுகளுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்தார்.

தொழிலாளர் கட்சியின் முதல் முறை எம்பியாகி உள்ள கனிஷ்கா நாராயண், அவரை தொடர்ந்து கன்சர்வேட்டி கட்சியின் ஷிவானி ராஜா ஆகியோர் பகவத் கீதையை கையில் வைத்து கொண்டு உறுதி மொழி எடுத்தனர். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாப் பிளாக்மேன் இங்கிலாந்தை சேர்ந்தவர். அவர் பதவி ஏற்கையில், ஒரு கையில் கீதையும் இன்னொரு கையில் கிங் ஜேம்ஸ் பைபிளையும் வைத்திருந்தார். சீக்கியர்களான டான் தேசி,குரிந்தர் சிங் ஜோசான்,ஹர்பிரீத் உப்பால், சத்வீர் கவுர்,வரீந்தர் சிங் ஜஸ் ஆகியோர் சீக்கிய மத வசனங்களை சொல்லி உறுதி மொழி எடுத்தனர். சீக்கிய பெண் எம்பி பிரித் கவுர் கில் மட்டும் சீக்கிய மத நூலான சுந்தர் குட்கா வைத்து கொண்டு பதவி ஏற்றார்.

Related posts

“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் தமிழக சுற்றுப் பயணத்திற்கான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இமாச்சல் மேகவெடிப்பு: அமித் ஷா விசாரிப்பு

பசுமையாக காட்சி அளிக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம்