இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி 28 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது இங்கிலாந்து: அறிமுக சுழல் ஹார்ட்லி அமர்க்களம்

ஐதராபாத்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 1-0 என முன்னிலை பெற்றது. ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 190 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்திருந்தது.

ஆலிவர் போப் 148 ரன் (208 பந்து, 17 பவுண்டரி), ரெஹான் அகமது 16 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது. ரெஹான் 28 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார். இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்த போப் – டாம் ஹார்ட்லி ஜோடி 8வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. ஹார்ட்லி 34 ரன், ஜாக் லீச் 0, போப் 196 ரன் (278 பந்து, 21 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

இந்திய பந்துவீச்சில் பும்ரா 4, அஷ்வின் 3, ஜடேஜா 2, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, அறிமுக சுழல் ஹார்ட்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 69.2 ஓவரில் 202 ரன்னுக்கு சுருண்டு 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. கேப்டன் ரோகித் 39, ராகுல் 22, ஸ்ரீகர், அஸ்வின் தலா 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஹார்ட்லி 26.2 ஓவரில் 5 மெய்டன் உள்பட 62 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். முதல் இன்னிங்சில் ஹார்ட்லி 131 ரன் வாரி வழங்கி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜோ ரூட், ஜாக் லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். போப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் பிப். 2ம் தேதி தொடங்குகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்