இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தயாராக இருப்பதாக தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர் உறுதி அளித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையே பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தகம் செய்வது தொடர்பாக இரு நாடுகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இதுவரை மொத்தம் 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து இரு நாடுகளிலும் பொதுதேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

மோடி 3ம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி தலைவர் கியர் ஸ்டார்மர் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் கியர் ஸ்டார்மரும், மோடியும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினர். அப்போது பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் செய்தி தொடர்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் ஸ்டார்மர் இங்கிலாந்து, இந்தியா நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தலைமையை கியர் ஸ்டார்மர் பாராட்டினார்.

இந்தியாவுடன் புதிய உத்திசார் கூட்டாண்மையே இங்கிலாந்தின் விருப்பம். கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவு வலுப்படுத்தப்படும். இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இங்கிலாந்த தயாராக உள்ளதாக மோடியிடம் கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர் நேற்று தன் முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதில் இங்கிலாந்து எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து அமைச்சர்களுடன் அவர் கலந்தாலோசித்தார்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு