பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு: 2.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார். ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 காலஅட்டவணையின்படி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ம் தேதி ஆகும். இதைத்தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி அன்று ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனிலேயே நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!