ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு; உத்தரவை திரும்பப் பெற்றது ஐகோர்ட்!

சென்னை: முன்னாள் போலிஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை ஐகோர்ட் திரும்பப் பெற்றது. வழக்கில் விளக்கங்கள் பெறுவதற்காக விசாரணையை ஆகஸ்ட் 27-க்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கின் அடிப்படையில் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்திருந்தது. ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை நேற்று ரத்து செய்த நிலையில், திடீர் திருப்பமாக ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது.

2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று (ஆக.23) ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்