அமலாக்கத்துறை சம்மன் எதிரொலி ஜார்க்கண்ட் முதல்வர் ராஜினாமா? இன்று ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்

ராஞ்சி: அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது. சட்டவிரோத சுரங்க அனுமதி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தொடர்ந்து 6 முறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் கடைசியாக அவர் விரும்பும் நேரம், விரும்பும் தேதி, இடம் ஆகியவற்றை குறித்து அனுப்ப வேண்டும். இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத்துறை கடைசி சம்மன் என்று குறிப்பிட்டு அனுப்பி உள்ளது. அவர் அமலாக்கத்துறை முன் ஆஜரானால், அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காண்டே தொகுதியில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட சர்பராஸ் அகமது என்பவர், திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து காண்டே தொகுதி டிசம்பர் 31, 2023 முதல் காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அமலாக்கத்துறை முன்பு முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராகும்பட்சத்தில், அவரை அமலாக்கத்துறை கைது செய்தால், அவருக்கு பதில் மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கவும், அவர் தேர்தலில் போட்டியிட வசதியாக, எம்எல்ஏ சர்பராஸ் அகமது கான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக பா.ஜ கூறி வருகிறது. மேலும் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் பா.ஜ தகவல் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மன் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* பா.ஜவின் கற்பனை ஹேமந்த் சோரன் பதில்
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபே வெளியிட்ட பதிவில், ‘ஜார்க்கண்ட் எம்எல்ஏவான சர்பராஸ் அகமது, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. ஹேமந்த் சோரன் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். பின்னர் அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராக பதவியேற்பார். இந்த புத்தாண்டு சோரன் குடும்பத்திற்கு சோதனைகளும் வேதனைகளையும் தரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று கூறியதாவது: காண்டே சட்டமன்றத் தொகுதியில் எனது மனைவி கல்பனா சோரன் போட்டியிடுவார் என்பது பாஜவின் முழுமையான கற்பனை. இந்த ஊகங்களில் ஒரு துளியும் உண்மை இல்லை. எனது மனைவியிடம் ஆட்சியை ஒப்படைக்கப்போவதாக பா.ஜ தவறான ஊகங்களை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்