அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்ககோரி செந்தில் பாலாஜி மனு: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்