மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்: அந்நிய செலாவணி விதி மீறல் புகார்

புதுடெல்லி : அந்நிய செலாவணி விதி மீறல் தொடர்பாக மக்களவை முன்னாள் உறுப்பினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்ற மக்களவையில் அதானி குழும மோசடி பற்றி கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிரா நந்தானி பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து குழுவின் பரிந்துரை அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

லஞ்சமாக பெற்ற பணத்தின் மூலம் மஹூவா மொய்த்ரா அந்நிய செலாவணி விதி மீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு வரும் 19ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே லஞ்ச புகார் தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரைப்படி சிபிஐ அனுப்பிய கேள்விகளுக்கு மொய்த்ரா பதில் அனுப்பியுள்ளார்.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்