ஆட்டிப்படைக்க உருவானதா அமலாக்கத்துறை? அரசியல் எதிரிகளை மிரட்டும் ஆயுதமாக மாறும் சட்டங்கள்: ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்ளும் திருத்தங்களின் நோக்கம்தான் என்ன?

அசுர பலமும் அளவில்லா அதிகாரமும் எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கும், ஆட வைக்கும் என்பதற்கு உதாரணமாகிக் கொண்டிருக்கின்றன, சமீபத்திய சில சம்பவங்கள். ஆளும் அரசை எதிர்த்துப் பேசினாலே, அவர்களை அடித்துத் துவைக்கும் அளவுக்கு சோதனை… விசாரணை… கைது என அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய ஏஜென்சிகளின் நடவடிக்கைகள்தான் இவை.
சோதனையும், விசாரணையும், கைதும் வழக்கமான சட்ட நடைமுறைதானே… என்று சாதாரணமாகக் கடந்து போய் விட முடியாது.

ஏனென்றால், ‘சட்ட நடைமுறை’ என்பதை விட, ‘சட்டத்தை உள்நோக்கத்தோடு மாற்றி நடைமுறைப்படுத்துவது’ என்பதுதான் இந்தச் சம்பவங்கள் என வெளிப்படையாக குற்றம் சுமத்தப்படும் அளவுக்கு, ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதில், நம் கண் முன்பு நேற்று முன்தினம் நிகழ்ந்த, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைதான். அமலாக்கத்துறை சோதனை… விசாரணை… கைது என நிர்ணயிக்கப்பட்ட வரிசையில் அடுத்தடுத்து நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

இதற்கு முன்பும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் உள்ள ஒரே ஒற்றுமை, இவர்கள் அனைவருமே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இதுவே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஒன்றிய பாஜ அரசு மீது எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றம் நியாயமானது, சரியானது என்று நிரூபிப்பதற்கு போதுமானதாகக் கருத முடிகிறது. ஏனெனில், பாஜ ஆதரவு நிலைப்பாடு எடுத்து விட்டால் அவர்கள் மீதான வழக்கு கிடப்பில்போய் விடுகிறது. கைது நடவடிக்கை கூட எடுக்கப்படுவதில்லை.

எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது, ஒரு நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள்தான். இவற்றை பயன்படுத்திதான் அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் ஏவி எதிர்க்கட்சியினரை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது என்று ஆணித்தரமான குற்றச்சாட்டு நிலவுகிறது. அப்படி மிரட்டலுக்காக தொடர்ந்து, அடிக்கடி பயன்படுத்தப்படும் சட்டம்தான், சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் – 2002.
சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், 2005ம் ஆண்டில்தான் தான் அமலுக்கு வந்தது.

முதலில் இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, சட்டவிரோதமாக வந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுப்பது, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார குற்றங்களுக்காக பணத்தை பயன்படுத்துவதை தடுப்பது, மோசடி பணம் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் அல்லது மோசடி பணத்தை வெள்ளையாக்க பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருந்தன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்தச் சட்டம் மூலம் அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 7 ஆண்டுகளும் சிறை தண்டனை கிடைக்கும். போதைப்பொருள் தொடர்புடைய குற்றமாக இருந்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், இதில் தொடர்புடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். உலக அளவில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பொது நோக்குடன், வியன்னா மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தப்படிதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமூக அக்கறையுடன் பொது நோக்கோடு கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த சட்டத்தில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்து, அரசியல் எதிரிகள் மீது பிரயோகிக்கும் வலுவான அஸ்திரமாக மாற்றியிருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு.

2019ல் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள்: சிபிஐ அல்லது இதர புலனாய்வு அமைப்புகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், 2019ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அமலாக்கத்துறைக்கு அளவில்லா அதிகாரத்தை வழங்குவதாக அமைந்துள்ளன. மேலும், எந்த ஒரு வழக்கிலும், விசாரணை அதிகாரி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர், குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார். ஆனால், புதிய திருத்தத்தின்படி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தான் உள்ளது. இதனால் இந்த வழக்கில் இருந்து விடுதலையாவது அவ்வளவு எளிதில் நடந்து விடுவதில்லை.

காரணம் தெரிவிக்க தேவையில்லை: வேறு புலனாய்வு அமைப்புகளால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதால், அமலாக்கத்துறையே நடவடிக்கை எடுக்க முடியும். அதோடு, எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கான ‘அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை’ நகலை குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு தர வேண்டிய அவசியம் கூட கிடையாது. அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (இசிஐஆர்) என்பது, விசாரணையை துவக்குவதற்கு முன்பு அமலாக்கத்துறையால் மேற்கொள்ளப்படுவது. போலீசார் பதிவு செய்யும் எப்ஐஆர் போன்றதுதான் இது. அதேநேரத்தில், எப்ஐஆரும் , இசிஐஆரும் ஒன்று என கருத முடியாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவுகள் நீக்கம்: முக்கிய திருத்தங்களில் ஒன்றாக, பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 17 மற்றும் 18 (நபர்களை தேடுதல்) உட்பிரிவு 1 (சோதனை மற்றும் பறிமுதல்) பிரிவுகள் நீக்கப்பட்டு விட்டன. இதுதான், பிற விசாரணை ஏஜென்சிகளின் எப்ஐஆர் அல்லது குற்றப்பத்திரிகை அடிப்படையில்தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற தேவையை நீக்கியுள்ளது. இவை மிக முக்கியமான திருத்தங்களாகும். வாரண்ட் இல்லாமல் கைது: பிரிவு 45 இல் சேர்க்கப்பட்ட விளக்கம் அனைத்து பி.எம்.எல்.ஏ குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வாரண்ட் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

சட்டப் பிரிவு 3ன் மற்றொரு முக்கியமான திருத்தமாக குற்றச்செயல்களை மறைத்தல், முறைகேடாக வந்த பணத்தை வைத்திருப்பது, கையகப்படுத்துவது, பயன்படுத்துவது, முறைகேடாக, மோசடியாக வந்த பணம் அல்ல என காட்டுவது, மோசடி பணத்தில் வாங்கிய சொத்து அல்ல என உரிமை கோருவது குற்றங்களாக கருதப்படுகிறது. சட்டப்பிரிவு 72ல் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, செயல்பாடு மற்றும் கொள்கை அளவிலான ஒத்துழைப்பிற்காக துறைகளுக்கு இடையே மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்புக்காக அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. 2023ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சமீபத்திய திருத்தமாக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வரம்பில் கணக்கு தணிக்கையாளர்களை (ஆடிட்டர்களை) ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

இதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. குறிப்பிட்ட 5 நிதிப் பரிவர்த்தனைகளின் கீழ் இவர்கள் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதாவது, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக அசையா சொத்துகளை விற்பது-வாங்குவது; வாடிக்கையாளரின் பணம், பங்குகள் அல்லது பிற அசையும் சொத்துகளை நிர்வகிப்பது; வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு, சேமிப்பு அல்லது பங்கு கணக்குகளை நிர்வகிப்பது; வாடிக்கையாளரின் நிறுவனத்தை நிர்வகிப்பது; வரையறுக்கப்பட்ட பங்குதாரராக இருப்பது மற்றும் வாடிக்கையாளருக்காக வா்த்தக நிறுவனங்களை வாங்குதல்-விற்றல் உள்ளிட்ட 5 நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க வேண்டியது ஆடிட்டர்களின் கடமையாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரத்தை அளிப்பதாக அமைந்து விட்டது. இதனால்தான் நினைத்த நேரத்தில் அரசியல் எதிரிகள் யாரையும் பதம் பார்க்க, பயமுறுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

* பல சட்டங்கள் பலன் ஒன்றுதான்
உலக அளவில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பொது நோக்குடன், வியன்னா மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தப்படிதான் இந்தச் சட்டம் பண மோசடி தடுப்பு சட்டம் எனப்படும் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டம் 2002 கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில் இதே போன்ற நோக்கத்தில்தான் கருப்பு பண ஒழிப்பு சட்டம் 2015 கொண்டு வரப்பட்டது. இதுதவிர, இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 உள்ளது. தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இவற்றை செயல்படுத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை தடுக்க நிறைய சட்டங்கள் இருந்தாலும், வரையறைகள் நடைமுறைகள் தனியாக இருந்தாலும் அவற்றின் பொது நோக்கம் ஏறக்குறைய ஒன்றாகவே இருப்பதை காண முடிகிறது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

* ‘மாய’ வழியில் சேர்க்கப்படும் நிபந்தனைகள்
பொதுவாக ஒரு சட்டத்திருத்தமானது, அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்பட்டு கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், வழக்கமான சட்ட திருத்தமாக அல்லாமல் நிதி மசோதாவில் கொண்டு வந்து நிறைவேற்றும் புதிய மாய வழியை கடைப்பிடித்து வருகிறது ஒன்றிய அரசு. இதனால்தான், நடவடிக்கை பாயும் வரை சில திருத்தங்கள் மற்றும் புதிய அதிகாரங்கள் வெளிப்படையாக தெரியாமல்போய் விடுகின்றன.

* ஜாமீன் வாங்குவதிலும் சிக்கல் குற்றப்பத்திரிகை தாக்கல் 90 நாள் அல்ல 365 நாள்
பொதுவாக வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால், இந்த கால அவகாசத்தை 365 நாட்களாக மாற்றி அமைத்துள்ளது ஒன்றிய அரசு. இதனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் காரணம் காட்டி ஜாமீன் பெற முடியாது. இதனால்தான் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆண்டுக்கணக்கில் சிறையில் காலம் கழிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, உத்தவ் அரசில் அமைச்சராக இருந்தபோது கைதான நவாப் மாலிக் இன்னும் சிறையில்தான் உள்ளார். 1999ம் ஆண்டு நடந்த சொத்து பரிவர்த்தனை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2005ல்தான் அமலானது. இருப்பினும் முன்தேதியிட்டு இந்த சட்டத்தின் கீழ் நவால் மாலிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள்தான் என உத்தவ் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

* யாரையும் தூக்கலாம் எதுவும் செய்யலாம்
அசுரபலம் மிக்கதாக ஒன்றிய ஏஜென்சிகளை மாற்றும் முக்கிய அம்சமாக, பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்படி, ரூ.2 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தாலே வழக்குபோட முடியும் என்ற விதி இடம் பெற்றுள்ளது. இது அரசியல் எதிரிகளை மட்டுமல்ல… சாமானிய மனிதன் முதல், சோறு போடும் விவசாயி வரை யாரையும் மிரட்டும் படு பயங்கர ஆயுதமாக மாறியிருக்கிறது. உதாரணமாக, பணப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயி, சாதாரணமாக ரூ.2 லட்சம் பெற்று விட முடியும். நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் விவசாயிகள் என்பதாலேயே அவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட சட்ட விதியின்படி இவர்களை கூட மிரட்ட முடியும் என்பது, நினைத்துப் பார்க்கவே குரூர காட்சியாக கண்முன் விரிகிறது.

ஏனெனில், ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக களமிறங்கி தொடர் போராட்டங்கள் நடத்திய விவசாயிகள், அசைக்கவே முடியாது என்று கருதப்பட்ட ஒன்றிய பாஜ அரசை அசைத்துப்பார்த்து விட்டார்கள். சட்டம் வாபஸ் பெறப்பட்டது அவர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஆனால், இனிவரும் காலத்தில் இவ்வாறு தங்களை பாதிக்கும் ஒன்றிய பாஜ அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள் மீது எளிதாக வழக்குப்போட்டு விடலாம். ஒன்றிய அரசை பொது வெளியில், இணையதளத்தில் விமர்சிக்கும், நாட்டு நலனில் அக்கறை கொண்ட சாமானிய நபரை கூட ரெய்டு பெயரில் ஆட்டம் காண வைத்து விடலாம்.

ஏனெனில், 2 லட்ச ரூபாய் என்பது நாட்டின் பெரும்பாலான மக்களிடம் ஏதோ ஒரு கட்டத்தில் இருக்கக்கூடிய பணம்தான். திருமணம், காது குத்து போன்ற விசேஷங்களுக்காகவும், நகை வாங்கவும் கொண்டு செல்லும் பணமாக இது இருக்கும். பெரும்பாலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணமாகவும், பலரிடம் விசேஷ செலவுகளுக்க கைமாற்றாக வாங்கிய பணமாகவும் இருக்கும். இதனால் இப்படிப்பட்ட நபர்கள் கூட சுதந்திரமாக இருக்க முடியாத ஒரு சூழ்நிலையை இத்தகைய விதிகள் ஏற்படுத்தி விட்டது மிக வேதனையானது என சமூக அக்கறை கொண்ட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை