அமலாக்கத்துறை இயக்குனருக்கு இந்தியா கூட்டணியை உடைக்க பதவி நீட்டிப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியா கூட்டணியை உடைப்பதற்காக அமலாக்கத்துறை இயக்குனருக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம் செப்.15 வரை பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு கேட்டதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் இது தொடர்பாக பேட்டி அளித்தனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்பி மனோஜ் ஷா கூறுகையில்,’ மறைமுக அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பை ஒன்றிய அரசு கேட்டுப்பெற்றுள்ளது. பொய் வழக்குகள் மூலம் இந்தியா கூட்டணியின் தலைவர்களை குறிவைப்பதே இதன் நோக்கம்’ என்று கூறினார். சமாஜ்வாடி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், ‘ அமலாக்கத்துறையில் வேறு யாரும் இல்லையா, முழுத் துறையும் திறமையற்றவர்களால் நிரம்பியுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது.

ஆனால் ஒரு நபரை கட்டாயமாக பதவியில் இருக்க வைக்க முயற்சி நடக்கிறது’ என்றார். மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில்,’ சஞ்சய் மிஸ்ராவுக்கு ஏன் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது? எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட விரும்புகிறார்கள். இந்தியா கூட்டணி இப்போது பா.ஜவே அதிகாரத்தை விட்டு விலகு என்று சொல்கிறது’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் கூறுகையில்,’ அமலாக்கத்துறை என்பது பாஜவுக்கு வேலை செய்யும் ஆயுதம்’ என்றார்.

Related posts

வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு அறிக்கை தர தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்பது வதந்தி: ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள்