அமலாக்கத்துறை சம்மன்களை நிராகரித்துவிட்டு கெஜ்ரிவால் நாளை குஜராத் செல்கிறார்

புதுடெல்லி: அமலாக்கத்துறை அனுப்பிய 3 சம்மன்களையும் நிராகரித்துவிட்டு 3 நாள் பயணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார். டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, எம்பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சம்மனை நிராகரித்துள்ளார் கெஜ்ரிவால். இதன் தொடர்ச்சியாக அவரது வீட்டின் முன்பு நேற்று டெல்லி காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் மக்களவை தேர்தல் பணிக்காக அவர் நாளை குஜராத்திற்கு செல்ல உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக செல்லும் கெஜ்ரிவால் அங்கு பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும், சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சைதர் வசாவா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு