தொழிலதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை 4வது நாளாக சோதனை

சென்னை: லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இதில், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையை சேர்ந்த லாட்டரி சீட்டு தொழிலதிபர் மார்ட்டின், வெளிநாடுகளில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்த வழக்கை அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

குறிப்பாக கோவை வெள்ளக்கிணறு காந்திபுரத்தில் உள்ள வீடு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர் மில்ஸ் (ஜிஎன் மில்ஸ்), ஓமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்திபுரம் 6வது வீதியில் உள்ள லாட்டரி அலுவலகம் என 4 இடங்கள் மற்றும் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம், வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்.எஸ்.மியூசிக் தலைமை அலுவலகம், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கன் சாலையில் உள்ள மார்ட்டின் மகன் வீடு என 3 இடங்கள் என்று மொத்தம் 7 இடங்களில் வியாழக்கிழமை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 4 நாட்கள் நடந்து வரும் சோதனையில் கோவையில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான ஓமியோபதி கல்லூரியில் நடந்த சோதனை மட்டும் நேற்று மாலை முடிவடைந்தது. மீதமுள்ள இடங்களில் சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. 4 நாட்களாக நடந்து வந்த சோதனையில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் அனைத்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் எந்த ஆண்டுகளில் வாங்கப்பட்டது. அதற்கான வருமானம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்