முடி உதிர்வுக்கு முடிவு!

நன்றி குங்குமம் தோழி

தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் தோற்றம் தர வேண்டும் என்பதே ஆண்-பெண் இருபாலரின் பொதுவான ஆசையாக இருக்கிறது. ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் அவர்களின் சிகை அலங்காரம் (hair style) முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் கூந்தலைப் பராமரிக்க பெண்கள் கூடுதல் முக்கியத்துவம் காட்டுகின்றனர். தலைமுடியின் வளர்ச்சி, முடி ஏன் கொட்டுகிறது, முடி கொட்டுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொடுகுத் தொல்லை ஏன் வருகிறது, இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள நிவாரணம் குறித்தெல்லாம் விரிவாக விளக்கி இருக்கிறார், சித்த மருத்துவ நிபுணரான டாக்டர் மானக்சா.

தலைமுடி வளர்ச்சி குறித்து விளக்குங்கள்..?

நமது தலைமுடி வளர்ச்சி நான்கு பருவங்களைக் கொண்டது.

* முதல் பருவம் ‘அனாஜன்’ – வளர்ச்சிப் பருவம்.
* இரண்டாவது ‘கேட்டஜன்’ – இடைநிலை பருவம்.
* மூன்றாவது ‘டோலாஜன்’ – வளர்ச்சி முடிவடைதல்
* நான்காவது ‘எக்சோஜன்’ – முடிந்து போன இடத்தில் புதிய முடி உருவாதல்.

தலைமுடி சருமத்தின் இரண்டாம் அடுக்கில் உள்ள மயிர் கால்களில் (Hair Follicles) தோன்றுகிறது. இது 95 சதவிகிதம் கெராடின் என்கிற நார்வகை புரதத்தாலும், 5 சதவிகிதம் கந்தகத்தாலும் உருவானது. கூடவே ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் புரதம் இணைத்திருக்கிறது.

* கரு உருவான 22ம் வாரத்திலேயே சிசுவிற்குத் தலைமுடி வளர்ச்சி தொடங்குகிறது. தினமும் 0.3 முதல் 0.4 மி.மீ அளவில் தலைமுடி வளர்ச்சி இருக்கும்.

* சராசரியாக ஒருவரது தலைப்பகுதியில் 80,000 முதல் 1,20,000 முடிகள் காணப்படும். ஒருவரது உடல் முழுவதும் சுமார் 5 மில்லியன் முடிகள் வரைக்கும் இருக்கும்.

* தலைமுடியின் ஆயுள் இரண்டு முதல் ஏழு வருடங்கள்.

* தினமும் 50 முதல் 80 முடிகள் உதிர்வது இயல்புதான். அதே அளவில் புதிய முடிகள் உடனே உருவாகும்.

* உள்ளங்கை, உள்ளங்கால், உதடு பகுதிகளில் மயிர்கால்கள் (Hair Follicles) இருக்காது.

* முடிகளை மண்ணில் புதைத்தால் மூன்று மாதங்களில் அழிந்துவிடும்.

தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள்..?

தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று உங்களின் முடி உதிர்வுக்கு காரணமாகலாம்.

* பொடுகுத் தொல்லை.

* புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் குறைபாடு.

* மன அழுத்தம், தூக்கமின்மை.

* அதிக உடல் வெப்பம்.

* ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு பிரச்னை.

* கூர்மையான சீப்பை அடிக்கடி பயன்படுத்துவது.

* குளிக்கும் நீரில் அதிக உப்புத்தன்மை கலந்திருப்பது.

* டைபாய்டு, மஞ்சள் காமாலை நோய் பாதிப்பிற்கு பின் தற்காலிகமாகக் கொட்டுவது.

* புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையால் தற்காலிகமாய் முடி உதிர்தல்.

* தலை வறட்சி அல்லது எண்ணெய் பிசுபிசுப்பால் வரும் பொடுகினால் (Dandruff) முடி உதிர்தல்.

* தலையில் உருவாகும் ‘டீனியா கேப்பைடிஸ்’ பூஞ்சை நோய்களினால் முடி உதிர்தல்.

* தலையில் ஏற்படும் கரப்பான் (Eczema) அல்லது காளாஞ்சகப்படை (Psoriasis) நோய்களினால் உதிர்தல்.

* Alopecia areata என்கிற புழுவெட்டு நோய் பாதிப்பில் தலையில் வட்டமாக ஓரிடத்தில் மட்டும் முடி உதிர்ந்து வழவழப்பாய் காணப்படுதல்.

முடி உதிர்வதை தடுக்கும் வழிகள் என்ன..?

* சிவப்புக் கொண்டைக் கடலை, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டாணி, எள், பாசிப்பயறு இவற்றில் ஒன்றையும், கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, அறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளில் ஒன்றினையும் கட்டாயம் உணவில் தினமும் சேர்க்க வேண்டும்.

* முட்டை, பால் போன்றவற்றில் தினமும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

* பேரீச்சம்பழம், அத்திப்பழம், மாதுளம் பழம், திராட்சை, ஆரஞ்சு இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்தால் முடிக்குத் தேவையான ‘கெராடின்’ (புரோட்டீன்), இரும்பு, துத்தநாகம், பயோடின் சத்துக்கள் கிடைத்துவிடும்.

* உடல் வெப்பம் தீர வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

* தினமும் 3 முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

* கால் பாதங்களில் பசு நெய்யினை இரவில் தடவினாலும் முடி வளர்ச்சியில் பலன் கிடைக்கும்.

* ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால், அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்வது அவசியம்.

* குளிக்க பயன்படுத்தும் நீர் கடின உப்புத் தன்மை இல்லாமல் இருக்குமாறும், மென்மையான முனை உள்ள, இடைவெளி அதிகம் உள்ள சீப்பினையும் பயன்படுத்துவதே நல்லது.

பொடுகு உருவாகக் காரணம்..?

பொடுகுத் தொல்லை ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் எண்ணெய் பசைத்தன்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காரணமாக தலையில் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்றான ‘Malassezia’ என்ற பூஞ்சை, பொடுகு செதில்களுக்கு இடையில் வளர்ச்சி அடைந்து, தலை முடியை சீவும் போது துகள் வடிவில் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் உதிர ஆரம்பிக்கும். கூடவே வறட்சியான தலை சருமம் அல்லது எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, சரியாக தலையைத் துடைக்காமல் சீப்பால் சீவுவது, அதிக உடல் சூடு, இரவில் தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் போன்றவைகளும் பொடுகுத் தொல்லைக்கான காரணங்கள்.

பொடுகை நீக்க சித்த மருத்துவத்தில் தீர்வு..?

* பொடுதலைக் கீரைச்சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 100மில்லி, மிளகு 10 கிராம் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

* வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

* வேப்பிலை, மஞ்சள் இவற்றை கற்றாழை ஜெல் பயன்படுத்தி அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

* வேம்பம் பூ, எலுமிச்சை பழத்தோல் இவைகளை உலர்த்தி பொடித்து தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

* தயிரை நன்றாகத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து மிருதுவான ஷாம்பால் சுத்தம் செய்யலாம்.

உடல் வெப்பத்தை எவ்வாறு குறைப்பது..?

கடுக்காய்த்தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை பாலில் நன்கு அரைத்து தலைக்குத் தப்பளம் போன்று அரை மணி நேரம் வைத்து பின்பு குளித்து வந்தால் உடல் வெப்பம் நீங்கி, தலைமுடி நன்கு வளரும். கண்களும் ஒளி பெறும்.அடர்த்தி மற்றும் நீளமான முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் சொல்வது..?

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, நெல்லிக்காய் சாறு 100 மில்லி, சின்ன வெங்காயம் சாறு 100 மில்லி, இவற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 500 மில்லி இணைத்து, ஐந்து இதழ் செம்பருத்திப்பூக்கள் 25 சேர்த்து, அத்துடன் கருஞ் சீரகம் 20 கிராம், வெந்தயம் 20 கிராம் இணைத்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை மற்றும் தலை வறட்சி நீங்கி முடி அடர்த்தியாக கருமையாக செழித்து வளரும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related posts

வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!

இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்!

பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!