*கலெக்டரிடம் கோரிக்கை மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் டி.ஆர்.ஓ சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, கலால் உதவி ஆணையர் ராஜ்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் ஆற்காடு தாலுகா மோசூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மோசூர் கிராமத்தில் இருந்து காந்தி நகருக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சாலையை சீரமைக்க கோரி கடந்த ஜனவரி 6ம் தேதி கோரிக்கை மனுவினை அளித்தோம். அதன் பேரில் பிடிஓ நேரில் பார்வையிட்டார்.
மேலும், சாலைக்காக பொதுமக்கள் வாங்கி கொடுத்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு பிப்ரவரி மாதம் ஆன்லைன் மூலம் மனு அனுப்பப்பட்டது. அதன் பேரில் மார்ச் மாதம் அளவீடு செய்யும் போது சாலை ஆக்கிரமிப்பில் உள்ளது தெரியவந்தது.
அப்போது ஏற்பட்ட எதிர்பால் இந்நாள் வரை சாலை அளவீடு செய்யவில்லை. எனவே காந்திநகர் பகுதிக்கு உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் அளித்த மனுவில் கூறியதாவது: ஆற்காடு நகர நுழைவாயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நடுவே ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரவுண்டானா நடுவே டெல்லி கேட் வடிவத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாரத நாட்டை அடிமைப்படுத்திய, ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைவதற்கு காரணமான வெற்றியை கொண்டாடும் வகையில், ராபர்ட் கிளைவ் நினைவாக உள்ள டெல்லி கேட் நுழைவு வாயிலை, ஆற்காடு பைபாஸ் ரோடு நடுவே கட்டுவது மீண்டும் நினைவுபடுத்துவது போல் ஆகும்.
எனவே இந்த கட்டிடத்தை உடனே அகற்றி அதே இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை பெயர் வர காரணமாக அமைந்த ராஜா தேசிங்கு மனைவி ராணி பாய் சிலை அமைத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தின் வரலாறு அறிய காரணமாக அமையும். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, பொது பிரச்னைகள், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்து என 548 மனுக்கள் வரப்பெற்றன.
இதனை தொடர்ந்து காதொலிக்கருவி வேண்டி மனு அளித்த முதியவருக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் உடனடியாக ரூ.4,500 மதிப்பில் காதொலிக் கருவினை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


