பள்ளிப்பட்டு அருகே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

பள்ளிப்பட்டு: புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே திருமால்ராஜபேட்டை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்திற்கு அருகில் அங்கன்வாடி மையம் பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு கிராம மக்கள் சார்பில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் அந்த பாறை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடிவிட்டு, நிலத்தை சுற்றி நான்கு மின்கம்பங்கள் 2 செல்போன் இரும்பு கம்பங்கள் அமைத்து வாகனங்கள் நிறுத்திவைத்துள்ளார்.

இதனால் அங்கன்வாடிக்கு மாணவர்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். அதே சமயம் ஆழ்துளை கிணறு மூடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் கிராம மக்கள் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று புகார் செய்ய வந்திருந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்ய வந்திருந்த மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் பொதுமக்கள் புகார் மனுவை வழங்கி புறம்போக்கு நிலத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு