ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்காமல் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிப்பதா? எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஸி நேற்று வெளியிட்ட அறிக்கை: வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தவறானது, கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பின் 25-28 பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மறுத்து, முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி அடிமைப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கை இதுவாகும். வக்பு சொத்துகள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகள். வக்பு வாரியம் மற்றும் வக்பு சொத்துகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்பு சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் செல்வாக்கு உள்ள பல செல்வந்தர்களால் ஏராளமான வக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வக்பு சொத்துகளைப் பயன்படுத்துவதற்கு திருத்தம் என்கிற பெயரில் தேவையற்ற தடைகளை விதிக்காமல், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துகளை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!