ஊக்குவித்தல் வெற்றிக்கான உன்னத வழி

வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றிக் கொள்ளும் வல்லமை ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே இருக்கிறது.இதை உணர்ந்துகொண்டு நமது எண்ணங்களைச் செதுக்கிக்கொண்டே சிகரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நமது வாழ்க்கையை முதலில் நேசிக்கத் தொடங்க வேண்டும். நேசிக்கும் மனம் இருந்தால் நெருப்பின் மீதும் பூ பறிக்கலாம்.தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெற்றியின் சிகரத்தை அடையலாம்.நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள் என்பதைவிட, இனிமேல் எவ்வாறு வாழப்போகின்றீர்கள்? இனிவரும் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு வெற்றி வாழ்க்கையாக மாற்றப் போகிறீர்கள்? என்று சிந்திக்கத் தொடங்குங்கள்.

வளர்ந்துவரும் செடிக்கு எவ்வாறு நீரும், உரமும் அவசியமோ, அதுபோல முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஊக்குவிப்பு என்பது மிகவும் அவசியம். ‘‘உன்னால் முடியும்” ‘‘நீ நன்றாக செய்திருக்கிறாய்! இன்னும் சிறப்பாக உன்னால் செய்யமுடியும்” என்ற ஊக்குவிப்பு வார்த்தைகளை உதட்டளவில் சொல்லாமல் தங்களுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் நிறைவான பலன் கிடைக்கும்.ஊக்குவித்தல் என்பது வெற்றிக்கான உன்னத வழி,இதற்கு உதாரணமாக பிரஞ்சலி அஸ்வதி என்ற சாதனைச் சிறுமியை சொல்லலாம்.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் சாதனை சிறுமி பிரஞ்சலி அஸ்வதி. இவரது தந்தை தனது மகளைப் பள்ளியில் படிக்கும் போதே கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த கல்வியைக் கற்றுத் தந்து மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்தார். அதன் மூலமாக தன் மகளைத் தொழில்நுட்பத்தில் சிறந்தவராக உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவு, ஒரு காலகட்டத்தில் தந்தையின் கனவு, மகளின் கனவாக மாறிப்போனது. தனது தந்தையின் ஆர்வத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டவர், தந்தையின் தொடர் ஊக்கத்தால் மென்மேலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயதிலேயே பிரஞ்சலி அஸ்வதிக்கு ஏற்பட்டது. ஏழு வயதிலேயே கோடிங் (coding) கற்கத் தொடங்கினார்.

இவரின் 11 வது வயதில் குடும்பத்தினர் இந்தியாவிலிருந்து புளோரிடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அப்போது டெக்னாலஜியை குறித்து அறிந்து கொள்ள அஸ்வதிக்கு மேலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புகள் மற்றும் கணிதப் போட்டி வகுப்புகளை இளம்வயதிலேயே கற்றுக்கொண்டார்.13 வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார். இதுவே இவர் தொழில் முனைவோராவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது. இவர் இன்டர்ன்ஷிப்பில் இருக்கும் போது மெஷின் லேர்னிங் (machine learning) குறித்த கல்வியை ஆன்லைன் முறையிலேயே படித்து முடித்து தனது தொழில்நுட்பத் திறனை மேலும் வளர்த்துக்கொண்டார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளைப் பிரித்தெடுப்பது மற்றும் ஆய்வை மொத்தமாகத் தொகுத்து வழங்கும் யோசனை இவருக்கு தோன்றியிருக்கிறது. அப்போதுதான் 2022 ஜனவரியில் தனது Delv.AI என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அந்நிறுவனத்தை 16 வயதிலே சிறுமி பிரஞ்சலி அஸ்வதி உருவாக்கி இருக்கிறார்.மியாமி டெக்வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின், இதற்காக 4,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியைப் பெற்று அசத்தியுள்ளார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் வேலை செய்கின்றனர். சிறுவயதிலேயே டெக் உலகில் கவனம் பெற்றதற்குக் காரணம் தன்னுடைய தந்தையின் தொடர் ஊக்கமும், அதற்கு ஏற்ப தகுந்த பயிற்சியும் அளித்தது தான் என்கிறார் பிரஞ்சலி அஸ்வதி.

வணிகப் பிரிவு மற்றும் ஒரு துறையால் தனியாகக் கட்டுப்படுத்தப்படும் தரவுகள் `சையலோடு டேட்டா’ (Siloed data) என்று அழைக்கப்படுகிறது. இந்த டேட்டாக்களை டிஸ்மாண்டில் செய்யவும், தரவு களைப் பிரித்தெடுக்கும் செயல்முறையுமே Delv.AI நிறுவனத்தின் முக்கிய நோக்க மாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.தொழில்நுட்ப உலகில் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான ஆய்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி 16 வயதிலேயே தொழில் முனைவோராக உருவாகி சாதித்து வருகிறார் சாதனைச் சிறுமி பிரஞ்சலி அஸ்வதி. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான பாதையைக் காட்டி சிறிதளவு ஊக்க மளித்தாலே போதும் அந்தப் பாதையிலே அவர்கள் சாதித்துக் காட்டுவார்கள் என்பது தான் பிரஞ்சலி அஸ்வதியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது