மனதை மயக்கும் மச்ச அவதார ரகசியம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மத்ஸிய ஜெயந்தி

வேத மந்திரங்களில் மிகவும் புகழ்பெற்றது புருஷ சூக்த மந்திரம். பகவானின் அவதார ரகசியத்தைச் சொல்லும் இந்த சூக்தத்தில் ‘‘பிறப்பில்லாத பெருமான் பற்பல பிறவிகளை எடுக்கிறான்’’ (அஜாயமாநோ பஹுதா விஜாயதே) என்று வருகிறது. “நாட்டில் பிறந்த மனுசருக்காய் படாதன பட்டு” என்று, அவன் விண்ணுல கத்தை விட்டு மண்ணுலகத்திற்கு இறங்கி வந்து, பற்பல லீலைகளைப் புரிகிறான். தனக்கு பலப் பல ஜன்மம் இருந்ததை கண்ணன் கீதையில், அர்ஜுனனுக்குச் சொல்கிறான்.

பஹுநி மே வ்யதீதாநி, ஜந்மாநி தவ சார்ஜுன
தாந்யஹம் வேத ஸர்வாணி, ந த்வம் வேத்த பரந்தப (கீதை 4.5)
ஆனால், இரண்டு ஜென்மங்களுக்கும் உள்ள வேறுபாட்டை கண்ணன் அடுத்துச் சொல்கிறான்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்
பகவானின் அவதார அடிப்படை நோக்கம் இரண்டே இரண்டுதான்.
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே

  1. சாதுக்களைக் காப்பது, துஷ்டர்களை அழிப்பது.
  2. தர்மத்தை நிலைநிறுத்துவது.

யார் துஷ்டர்கள் என்றால், பகவானை எதிர்ப்பவர்களோ. பகவானை இல்லை என்று சொல்பவர்களோ துஷ்டர்கள் அல்ல. பகவானின் பக்தர்களை, யார் அதர்மமாக, ஹிம்சை செய்கிறார்களோ, அவர்களைத் தண்டிப்பதற்காக அவதாரம் எடுக்கின்றான். அவதாரம் என்றாலே மேலே இறங்கி கீழே வருதல் என்று பொருள். அப்படி கீழே இறங்கி வருவதற்குக் காரணம் கீழே உள்ளவர்களை மேலே உயர்த்துவதற்காகத் தான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லுவார். ‘‘நீங்கள் இந்த நிலவுலகத்தில் மனித ராகப் பிறந்துவிட்டீர்கள். வேறு வழியில்லை. வாழ்ந்துதான் ஆக வேண்டும். மனைவி, மக்கள், தாய், தந்தை உறவு என்று ஆயிரம் கடமைகள் உங்களுக்கு இருக்கின்றன. உங்களுக்கு இரண்டு கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கையால் இந்தக் கடமைகளை எல்லாம் பிடித்துக் கொண்டு செய்யுங்கள். இன்னொரு கையால் எப்பொழுதும் பகவானைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

உலகியல் கடமைகளை ஒரு கட்டத்தில் நீங்கள் அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, அல்லது நிறுத்திவிட்டு, இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு மேலே ஏறுவதற்கு முயற்சி செய்யுங்கள்’’. ஒரு கிணற்றிலே தவறிப்போய் குழந்தை விழுந்துவிட்டது என்று சொன்னால், பெற்ற தாய் பதறிப் போய், தானும் கிணற்றிலே குதித்து, அந்த குழந்தையைக் காப்பதற்காகப் போராடி, குழந்தையை மீட்டுக்கொண்டு மேலே வருவாள்.

தாயுமானவனான எம்பெருமானும், பற்பல அவதாரங்களை எடுக்கின்றான். எம்பெருமானுடைய அவதாரங்கள் 36 என்று சொல்கின்றார்கள். ஆனால் பிரதானமான அவதாரமாக தசாவதாரங்களைச் சொல்லுகின்றார்கள். ஆழ்வார்கள் இந்த தசாவதாரம் வைபவத்தை தங்களுடைய அருந்தமிழ் பாடல்களிலே பாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அறியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசடிலாப்
பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
இந்த அவதார வைபவத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

எம்பெருமான் தானே ஏதாவது ஒரு ரூபத்தில் இறங்கி வருவது. இதை சாட்சாத் அவதாரம் அல்லது முக்கிய அவதாரம் என்பார்கள். சில நேரங்களில் ஆவேச ரூபமாக, அவன் மற்றவர்கள் உடல்களில் புகுந்து கொண்டு தன்னை வெளிப் படுத்திக் கொள்வதும் உண்டு. அவர்களை தேவாம்சம் பொருந்தியவர்கள் என்று சொல்வோம். அந்த ஆவேச அவதாரங்களில்கூட தன்னுடைய ரூபமாகவே ஆவேசத்தை புகுத்தி நிற்பதும் உண்டு. உதாரணமாக பரசுராமன், பலராமன் போன்ற அவதாரங்களைச் சொல்லலாம். சில நேரங்களில் தன்னுடைய சக்தியை மாத்திரம் அவன் அனுப்பி, அதன் மூலமாக, பல காரியங்களைச் செய்து கொள்வதும் உண்டு. வியாசர் போன்ற அவதாரங்கள் வேதங்களைத் தொகுப்பதற்காக, எம்பெருமானின் சக்தி ரூபமான அவதாரங்கள் ஆகும்.

இதை பகவத் கீதையில், “வியாசாய விஷ்ணு ரூபாய” என்கின்ற தொடரால் நாம் அறியலாம். இதில் முதல் அவதாரம் மச்ச அவதாரம். யுகங்களின் முடிவில் பிரளயம் உண்டாகும். எந்த விஷயமாக இருந்தாலும் அது ஒரு முடிவுக்கு வந்து மறுபடியும் தொடங்கும் என்பதே நைமித்திக பிரளயத்தின் பொருள்.

ஒரு பொன் ஆபரணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதிகம் உபயோகமாகிய பின், அந்த ஆபரணம் கொஞ்சம் நசுங்கி இருக்கும். அழுக்குகள் சேர்ந்திருக்கும். அதனால் அதன் ஒளி மங்கி இருக்கும். இப்பொழுது அந்த ஆபரணத்தை எடுத்து அமிலத்தில் போடுவார்கள். ஆபரணம் கரைந்து உருமாறி வேறு ஒரு நிலையில் இருக்கும். இப்பொழுது அந்த ஆபரணம், எந்த ஆபரணமாக இருந்தது என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கும். ஆனால், பொன் அப்படித்தான் இருக்கும்.

இந்த உலகம் என்பது பொன் ஆபரணத்தைப் போல இருந்தது. ஆபரணம் பல வடிவங்களில் இருப்பது போல இந்த உலகமும் பலவிதமான அழகுகளோடு இருந்தது. ஆனால் கலி தோஷம் சேர்வது போல இந்த உலகத்தில் பல குற்றங்கள் சேர்ந்து, முடிவில் பிரளய காலத்தில் அழிந்தது. (அழிதல் என்பது இல்லாத நிலையல்ல. உரு மாறிய நிலை. பிரகிருதி, ஆன்மா, பரம்பொருள் – இது மூன்று என்றைக்கும் (சத்+சித்+ஈஸ்வரன்=சத்யம் முப்பொருள் உண்மை) இப்பொழுது மறுபடியும் அந்த பொன் ஆபரணக் கலைஞர் புதிதாக ஆபரணத்தை செய்வது போல உருவாக்குவார். பகவான் அப்படித்தான் புதிதாக உலகத்தைப் படைப்பான்.

அப்படி படைப்பதற்கு மூன்று பொருள்கள் வேண்டும். ஒன்று பொன் வேண்டும், பொன்னை வெவ்வேறு ஆபரணங்களாகச் செய்வதற்கு சில கருவிகள் வேண்டும். மூன்றாவதாக செய்கின்ற கலைஞன் வேண்டும். கலைஞன் எப்படி இந்த ஆபரணத்தை, எந்த வடிவத்தில் செய்ய நினைக்கிறாரோ, அப்படித்தான் அவர் செய்வார். அதைப்போல பகவான் தன்னுடைய சங்கல்ப விசேஷத்தினாலே இந்த உலகத்தை படைக்கிறார்.

சுத்த சாத்வீகமான உலகம்தான் கட்டி பொன். (24 காரட்) ஆனால் அதிலே ருசி இருக்காது. கட்டிப் பொன்னை வைத்துக்கொண்டு கழுத்தில் மாட்டிக் கொள்ள முடியாது அல்லவா. அதில் செம்பும் இதர கற்களும் சேர்ந்தால் அது வண்ணமயமான ஆபரணமாக இருக்கும். அதைப்போல சத்வ, ரஜஸ், தமோ குணங்களை இணைத்து, மலைகளும் கடல்களும் பயிர்களும் படைத்து அவைகளோடு உயிரையும் படைக்கிறான். அவன் படைப்பில் ஓர் உயிர் முதற்கொண்டு ஆறறிவு படைத்த உயிர்கள் வரை பல்வேறு பரிணாமங்களுடன் இருக்கின்றன. இது ஒவ்வொரு பிரளய காலங்களிலும் நடக்கிறது.

அப்படித்தான் ஒரு கல்ப காலத்தில் நைமித்திக பிரளய நேரத்தில், மயங்கியிருந்த பிரம்மனின் கையில் இருந்த வேதங்களை ஹயக்ரீவன் என்கின்ற தானவன் அபகரித்துக்கொண்டு எங்கோ போய் ஒளிந்து கொண்டான். நாம் ஏற்கனவே சொன்னது போல், வெறும் கட்டிப் பொன்னைக் கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. கருவிகள் வேண்டும். ஆபரணங்களாகச் செய்யக்கூடிய கருவி இல்லையே! அதனால், பிரம்மன் எம்பெருமானிடம் சரணடைந்து, தனக்கு படைப்புத் தொழில் செய்ய கருவிகளை (வேதங்களை) மீட்டுக் கொடுக்க வேண்டுகிறான். அவருக்கு உதவ ஏற்பட்ட முதல் அவதாரம் மச்ச அவதாரம். பெருமாள் ஒரு சின்னஞ்சிறிய மீனாக உருக் கொண்டார். இதே காலத்தில் கிருதமாலா என்னும் நதிக்கரையில் திருமாலைக் குறித்து சத்தியவிரதன் என்கின்ற அரசன் தவம் செய்துகொண்டிருந்தார்.

அவர் அரசனாக இருந்தாலும், ஒரு ரிஷியைப் போல் வாழ்ந்துகொண்டிருந்ததார். அவரை ராஜரிஷி என்று சொல்வார்கள். ஒரு நாள், அவர் காலையில் சந்தியா வந்தனம் செய்ய வந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வார்த்து தர்ப்பணம் செய்து கொண்டிருந்தபொழுது, அந்த நீரோடு உள்ளங்கையில் ஒரு சிறிய மீன் வந்தது. உடனே அவர் அதை நதியில் விட்டுவிட முயன்றார். அப்பொழுது அந்த மீன் பேசத் தொடங்கியது.

‘‘சத்திய விரதா, இப்பொழுது இந்த நீரில் என்னை நீ விடாதே. என்னை நீ உன்னுடைய கமண்டலத்தில் வைத்துக்கொள். இப்பொழுது காரணத்தைக் கேட்காதே’’ என்று சொல்லியவுடன் சத்யவிரதன் அந்த மீனை எடுத்து தன்னுடைய கமண்டலத்தில் விட்டார். ஆனால், மறுநாள் அந்த கமண்டலத்தைப் பார்க்கின்றபொழுது, அவருக்கு வியப்பு.

நேற்று சின்னஞ்சிறு மீனாக இருந்தது. இப்பொழுது கமண்டல அளவு நீர் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பெரிய மீனாக ஒரே இரவில் வளர்ந்திருந்தது. இப்பொழுது இந்த சிறிய இடம் மீனுக்கு போதாது என்று நினைத்து ஒரு பெரிய குளத்தில் மீனைச் சேர்த்தார். அந்த குளம் முழுக்க அந்த மீன்பேருரு கொண்டு வளர்ந்திருந்தது. அதை அடுத்தநாள் ஒரு ஏரியில் விட்டார்.
அடுத்த நாள் பார்க்கையில் ஏரி நிரம்பும் படியாக அந்த மீன் வளர்ந்து இருந்தது. கடைசியில் கடலில் விட்டார். அப்பொழுது அந்த மீன் ஒரு பிரம்மாண்டமான கப்பலை போல வளர்ந்திருந்தது. அவருக்கு மச்ச ராஜன் என்ற பெயர் சூட்டினார் சத்யவிரதன். அப்பொழுது அந்த மீன் மறுபடி பேசியது.

‘‘சத்யவிரதனே, இன்றிலிருந்து ஏழு நாட்களுக்கு பின் இந்த உலகம் பிரளயத்தில் அழியப்போகிறது.’’ சத்தியவிரதன் கேட்டார், ‘‘அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’’மீன் மேலும் பேசியது, ‘‘உலகம் முழுக்க நீரால் சூழப்பட்ட அந்த காலத்தில், எந்த உயிர்களும் இருக்காது. அப்பொழுது இந்த நீரில் நான் படகுபோல சஞ்சாரம் செய்து கொண்டிருப்பேன். அந்தப் படகில் நீயும் உன்னோடு ஏழு ரிஷிகளும் ஏறிக் கொள்ள வேண்டும். அப்பொழுது மிகப்பெரிய காற்று வீசும்.

நீங்கள் கீழே விழுந்து விடாமல் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த பிரளயம் நீங்குவதற்கு சற்றுக் காலம் பிடிக்கும். (ஒரு ஆபரணத்தை அழித்து இன்னொரு ஆபரணமாக செய்ய வேண்டும் என்றால் சில நாட்கள் பிடிக்கும் அல்லவா)சத்திய விரதன், ‘‘அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தான். சொன்னபடியே ஏழாவது நாள் வந்தது. கரு மேகங்கள் சூழ்ந்து, விடாமல் தொடர் மழை பெய்தது. உலகம் முழுக்க நீரில் மிதந்தது. சொன்னபடியே அந்தப் பெரிய மீன் படகுபோல வந்தது. அதில் சத்திய விரதனும், ரிஷிகளும் மற்றும் உயிர்களுக்கான ஆதார பீஜங்களும் (விதைகளும்) ஏறிக் கொண்டன. பெருங்காற்று அடித்தது.

அப்பொழுது மீனின் கொம்பில் உள்ள சர்ப்பத்தில் அனைத்தையும் கட்டிக் கொண்டனர். (நாம் எப்படி காரிலோ விமானத்திலோ செல்லும்பொழுது சீட் பெல்ட் போட்டுக் கொள்வோம் அல்லவா அதைப்போல) பொன்மயமான அந்த மீன், அங்குமிங்கும் சில காலம் சஞ்சரித்தது. அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். இறுதியாகப் பிரளயம் முடிந்தது. ஹயக்ரீவன் என்கின்ற அந்த குதிரை முகம்கொண்ட அசுரனிடமிருந்து வேதங்களை மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்தார். பகவானின் ஆணைப்படி புதிய உலகம் படைக்கத் தொடங்கினார் நான்முகன். இந்த மச்ச அவதாரத்தை ஆழ்வார்கள் மிகவும் அனுபவித்துப் பாடுகின்றார்கள். இந்த மச்ச அவதாரத்தை, மச்ச நாராயணன்’ என்றும், வேதங்களை மீட்டுக் கொடுத்ததால்,வேத நாராயண மூர்த்தி’ என்றும் ரிஷிகளும், ஆழ்வார்களும் போற்றுகின்றார்கள். திருக்கண்ணங்குடி என்கின்ற திவ்யதேசத்து பெருமாளைப் பாடும்பொழுது இப்படிப் பாடுகின்றார்.

வாதை வந்து அடர வானமும் நிலனும்
மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி
விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை
மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை
தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே

இந்த உலகம் முழுக்க கடலில் அழுந்தும் நேரத்தில், அவற்றையெல்லாம் தன்மீது ஏற்றிக்கொண்டு, மிக மகிழ்ச்சியாக அந்த சமுத்திரத்தில் பெருமாள் உலாவிக் கொண்டிருந்தார் என்று மச்சாவதார வைபவத்தைப் பாடினார்.

திருக்கண்ணங்குடிக்குப் பக்கத்தில் திருக்கண்ணபுரம் என்கின்ற திவ்யதேசம். அங்கேதான் திருமந்திரத்தினுடைய பொருளை திருமங்கையாழ்வார் விரித்து உரைத்தார். அந்த திருத்தலத்தைப் பாடுகின்ற பொழுது,

வானோ ரளவும் முதுமுந்நீர்
வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன்
அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத்
தடியேன் கண்டுகொண்டேனே.

இந்தப் பாசுரத்திலே பிரளயம் எப்படி இருந்தது என்பதை திருமங்கையாழ்வார் அற்புதமாக எடுத்துரைக்கிறார். நாம் 20 அடி 30 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்தது என்று சொல்லி அதை சுனாமி என்று வருணிக்கிறோம் அல்லவா!ஆனால், திருமங்கையாழ்வார் மச்சம் கடலில் அலைந்த போது இந்த கடல் அலைகள் வானைத் தொடுகின்ற அளவுக்கு உயர்ந்தது என்று பிரளயத்தின் பிரம்மாண்டத்தைப் பாடி, அந்தப் பிரளயத்தில் பிரம்மாண்டமான மீனாக பெருமாள் அங்கும் இங்கும் அலைகளில் சஞ்சரித்தார் என்று அவதார வைபவத்தை வியக்கும் படியாக பாடுகிறார். சுவாமி வேதாந்த தேசிகன் பத்து அவதாரங்களைக் குறித்து தசாவதார ஸ்தோத்திரம் என்ற ஒரு நூலை இயற்றியிருக்கின்றார்.

வேதங்களைத் தேடி மீன் அவதாரம் எடுத்து, அலைகடலில் ஊடுருவுகின்ற பொழுது, எப்படி ஒரு கப்பல் கடலில் போனால் நீரைக் கிழித்துக் கொண்டு போகுமோ, அந்தக் கப்பலின் அடிப்பாகத்தில் அலைகள் எல்லாம் பெரிய அளவில் எழுமோ, மச்சாவதாரம் நீந்துகின்ற கடலில் நீரலைகள் பெரிய அளவில் எழுந்து ஒன்றை ஒன்று மோதிச் சிதறின என்று
வர்ணிக்கிறார்.

இன்னொரு காட்சியையும் அவர் அருமையாக வர்ணிக்கிறார்.கடற்கரையில் நீராடுபவர்களை நாம் பார்த்திருக்கலாம். நீச்சல் தெரிந்த அவர்கள் கடலில் உற்சாகமாக நீராடுவார்கள். அப்பொழுது அவர்கள் செய்கின்ற ஒரு காரியத்தை நாம் கரையிலிருந்து ரசித்திருப்போம். ராட்சச அலைகள் மேலே வருகின்ற பொழுது, இவர்களும் எம்பி அந்த அலையோடு மேலே வருவார்கள். அலைகள் அடங்குகின்றபொழுது அப்படியே கீழே வந்து அடுத்து வருகின்ற அலையில் மேலே எழுவார்கள். இந்த காட்சி பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். அதைப்போல மச்சா வதாரத்தில் பகவான் கடலில் அலைகள் மேலே எழுகின்ற பொழுது தானும் மேலே எழுந்து, அது தணிகின்ற பொழுது கீழே போய், அடுத்த அலையில் மேலே வந்து, மிக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார் என்று பாடுகின்றார்.

நீந்துகின்ற மீனை பரவசமாகப் பார்க்கின்றபொழுது, நம்முடைய மனது சாந்தமாகும். தெளிவாகும். நம்முடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். அதனால்தான் கோயில் குளக்கரையில் நாம் மீன்களைப் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கின்ற பொழுது மச்சாவதாரம் நமக்கு நினைவுக்கு வர வேண்டும். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில், மீன் அவதாரத்தைப் பற்றி பல நாமங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அதில் சில நாமங்கள்.

  1. ஸத்ய: என்ற ஒரு நாமம். பழைய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய மகான்களுக்கும், சாதுக்களுக்கும் உபகாரம் செய்தார் என்று இதனுடைய பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.
  2. ஸத்ய பராக்கிரம என்று எம்பெருமானுக்கு ஒரு நாமம் உண்டு. மனு முதலிய ரிஷிகள், முனிவர்களுக்குத் தன்னுடைய பராக்கிரமத்தாலும், சத்தியத்தாலும்
    உபகாரம் செய்தார் என்று பொருள்.
  3. நிமிஷ அநிமிஷா என்று இரண்டு நாமங்களும் அதில் வருகின்றன. நிமிஷ என்றால் கண் சிமிட்டுவது அல்லது கண்ணை மூடிக்கொள்வது அல்லது கருணை காட்டாமல் இருப்பது. அநிமிஷ என்றால் ஒரு நிமிடம்கூட கண்ணை இமைக்காமல், ஒரு தாய் எப்படி தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றுவாளோ அதைப்போல சாதுக்களை காப்பாற்றுகின்றார் என்று அர்த்தம். வாசஸ்பதி என்று இறைவனுடைய நாமம் சொல்லப்படுகிறது. வேதத்தின் பொருளாக இருப்பவர். மச்ச அவதாரம் எடுத்து வேதத்தை காப்பற்றிக் கொடுத்தவர்.

மச்ச அவதார திருத்தலங்கள் ஒருசில மட்டும் இருக்கின்றன. அதில் முதலாவது, நாகலாபுரம். நாகலாபுரம் திருப்பதியில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் அமைந்துள்ளது. பெருமாளுக்கு வேத நாராயணப் பெருமாள் என்று பெயர். தன்னுடைய கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதற்கு தயாரான நிலையில், இத்தலத்தில் அருள் புரிகிறார். ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார் திருக்காட்சி தருகிறார்கள். ஒரு மீனின் வாயிலிருந்து பெருமாள் தோன்றுவது போல காட்சி இருக்கும். கண் குளிர இந்தக் காட்சியைச் சேவிக் கலாம். தாயாருக்கு, வேதவல்லித் தாயார் என்று பெயர். லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகியோருக்கு தனி சந்நதிகள் இருக்கின்றன.

இங்கு உள்ள பிராகாரத்தில் வீணை தட்சிணா மூர்த்தியை தரிசனம் செய்யலாம். பித்ரு தோஷம், சர்ப்பதோஷம் முதலிய தோஷங்கள் நீங்கக்கூடிய கோயில். கிருஷ்ணதேவராயர் தன் தாயார் நாகலாதேவி பேரில் கட்டிய ஆலயம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12,13,14-ஆம் தேதிகளில் மாலைநேரத்தில் சூரிய பகவான் தன்னுடைய கதிர்களை பெருமாள் மீது சமர்ப்பிக்கும் படியாக இருக்கும். மேலும், திருவரங்கத்தில் தசாவதார பெருமாள் சந்நதியில், ஸ்ரீமுஷ்ணத்தில், பட்டாபிராமர் சந்நதியில், குடந்தையில் பிரம்மன் கோயில் என்று அழைக்கப்படும் வேத நாராயணப் பெருமாள் சந்நதியில் நாம் இந்தப் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

Related posts

இந்த வார விசேஷங்கள்

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா?

கலைமகளின் கவின்மிகு கோயில்கள்