6,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மதுரை வடபழஞ்சியில் ஐ.டி. கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மதுரை வடபழஞ்சியில் பின்னக்கிள் இன்போடெக் சொல்யூசன்ஸின் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை எல்கோசெஸ்ஸில் அமைந்துள்ள பின்னக்கிள் இன்போடெக் சொல்யூசன்ஸின் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதுரை சிறப்பு பொருளாதார மண்டலம், வடபழஞ்சியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 245.17 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது.

இதில் 120 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் 950 பணியாளர்களுக்கு பணிவாய்ப்பு அளித்து, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளது. இது இந்தியாவில் அமையும் நான்காவது குளோபல் டெலிவரி சென்டராகும். உலகிலேயே மிகப்பெரிய பி.ஐ.எம் எனப்படும் பொறியியல் மையமாகும். பின்னக்கிள் நிறுவனத்தின் மையம் மூலமாக 6 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தை வளர்க்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும், தொழில்துறையில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தி வருவதை அனைவரும் அறிவார்கள். நம்முடைய இலக்கு தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவதுதான்.

இந்த இலக்கை அடைய உதவிடும் வகையில் பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். அதேபோல, ஐடி என்றாலே கலைஞர்தான். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர் கலைஞர். இந்தியாவிலேயே முதன்முதலாக 1997ம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி, தமிழ்நாட்டின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் கணினி பயில்வதை ஊக்குவித்தார். தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டில் மதுரையில் அமையும் இந்த பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி