Thursday, September 19, 2024
Home » தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

by Lavanya

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதிமுக பொதசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முழு அளவில் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அம்மா 2012-ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தைத் துவக்கினார்கள். இதன்மூலம், சுமார் 7,629 மருத்துவர்கள்; 18,846 செவிலியர்கள் உட்பட சுமார் 31,250 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர்.

* 10 ஆண்டுகால கழக ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன.

*அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற அம்மா அரசின் குறிக்கோளின்படி, 51 புதிய வட்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. எஞ்சிய 32 தாலுகாக்களில் மருத்துவமனைகள் ஏற்படுத்தத் திட்டமிட்டோம்.

*அம்மா அரசு 2020-ஆம் ஆண்டு, 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள நகர மற்றும் கிராமப் பகுதிகளில் முதற்கட்டமாக 1,851 அம்மா மினி கிளினிக்குகளைத் துவக்கியது.

*2011 முதல் 2016 வரை சிவகங்கை, திருவண்ணாமலை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை இ.எஸ்.ஐ-ல் புதிய மருத்துவக் கல்லூரி என்று 4 மருத்துவக் கல்லூரிகளும்; 2016 முதல் 2021 வரை புதுக்கோட்டை, கரூர் மருத்துவக் கல்லூரிகளும், பெருந்துறை மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாகவும்; இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்பட்டன. மேலும், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 19 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால், தமிகழத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக வெளிவருகின்றனர்.

*எங்கள் ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டன. சுமார் 31,250 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

*ஆயிரக்கணக்கான மருத்துவர் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் 2,553 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என அறிவித்து வருகிறார். அரசு மருத்துவர் பணி வேண்டி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள், இது வேதனையாக உள்ளது என கவலை தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்மா ஆட்சியின்போது தமிழகத்தில் ஏற்படும் மருத்துவ காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டதன் விளைவாக,

*இந்தியா முழுவதும் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அளவை, தமிழ் நாட்டில் 2018-லேயே அடைந்ததால் ஒன்றிய அரசின் விருதைப் பெற்றோம்.

* உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக, 2015 முதல் 2020 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற விருதினைப் பெற்றோம்.

*வருங்கால தமிழகம் ஆரோக்கியமானதாகத் திகழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரத்த சோகையை போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும், ரூ. 4,000 மதிப்புள்ள இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து பொருட்கள் அடங்கிய “அம்மா தாய் சேய் நல ஊட்டச் சத்து பெட்டகம்” திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.

* எனது தலைமையிலான அம்மா அரசு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டை அறிவித்ததன் மூலம் 2020 முதல் 2024 வரை சுமார் 3,446 ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பை முடித்து வெளிவரும் மருத்துவர்கள் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரவில்லை. இதனால், பலர் மருத்துவ உயர் படிப்பையும் தொடர முடியாமல், உரிய நேரத்தில் அரசுப் பணியும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பலர் தனியார் மருத்துவமனைகளிலும் அல்லது மருத்துவம் சாராத சில நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் போதிய சம்பளம் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் ? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிற்ட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

eighteen + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi