எமர்ஜிங் ஆசியக் கோப்பை டி 20; யுஏஇ அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்

துபாய்: எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.  எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த 8வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணி மற்றும் இந்தியா ஏ அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் ராஜேஷ் முதல் ஓவரிலேயே வெளியேறினார்.

தொடர்ந்து 2வது ஓவரில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் அர்யன்ஷ் சர்மாவை வைபவ் அரோரா வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய ராகுல் சோப்ரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 16.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. ராகுல் சோப்ரா மட்டும் தனி ஆளாக போராடி 50 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் ரஷித் சலாம் 3 விக்கெட்டுகளையும், ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் ஆடியது. முதல் ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் பாசில் ஹமீது வீசிய 2வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்களை விளாசிய அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் பவர்பிளே முடிவிலேயே இந்திய அணி 74 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் (24 பந்து, 58 ரன்) விளாசி அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி வெறும் 10.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் பி பிரிவில் 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்