எமர்ஜிங் ஆசிய கோப்பை செமி பைனல் இந்தியா-வங்கதேசம், இலங்கை-பாக். மோதல்

கொழும்பு: வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியான ‘ஏசிசி எமர்ஜிங் கோப்பை’ இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டியில் களம் கண்ட 8 அணிகள் தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்கும் முன்னேறியது. அதே பிரிவில் 2 வெற்றி, இந்தியாவுடன் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை பெற்றது. பி பிரிவில் தலா 3 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 4 புள்ளிகளுடன் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை சமநிலையில் இருந்தன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை, வங்க அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் களம் காணுகின்றன. ஏசிசி எமர்ஜிங் கோப்பையை இதுவரை 2முறை வென்ற முன்னாள் சாம்பியன் இலங்கை, சொந்த மண்ணில் 3வது முறையாக கோப்பையை வெல்லும் வேகத்துடன் களம் காண உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள மல்லுக் கட்டும்.

எனவே துனித் வெல்லலாகே தலைமையிலான இலங்கை அணி 2வது முறையாகவும், முகமது ஹாரிஸ் தலைமையிலான பாக் அணியியும் 4வது முறையாகவும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முனைப்புக் காட்டும். தொடர்ந்து 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. கடந்த முறை இறுதி வரை முன்னேறிய வங்கம், இந்த முறையாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. அதனால் சயீப் ஹஸ்ஸன் தலைமையிலான வங்கம் 2வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழைய வேகம் காட்டும். அந்த வேகம் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியிடம் எடுபடுமா என்பது சந்தேகம்தான். காரணம் இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத வலுவான அணியாக உள்ளது. கூடவே சாய் சுதர்சன் உள்ளிட்ட வீரர்கள் ஆட்டத்திறனுக்கு திரும்பியிருப்பது அணிக்கு பெரும் பலமாக இருக்கும்.

Related posts

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது