தமிழ்நாடு அரசு இலச்சினை (Emblem of Tamilnadu)

இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளைக் கொண்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் தங்களுடைய சொந்த மாநிலச் சின்னம், முத்திரை அல்லது கோட் ஆஃப் ஆர்ம்ஸைக் கொண்டுள்ளன. அவை அதிகாரப்பூர்வ அரசாங்க அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஐந்து ஒன்றியப் பகுதிகள் இந்தியாவின் தேசிய சின்னத்தைத் தங்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்துகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு மாநில அரசால் அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் சின்னம் அல்லது இலச்சினை கோயில் கோபுரம் ஆகும். இந்த இலச்சினை தமிழ்நாடு அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலிலும், அரசு உயர் அலுவலக கட்டட முகப்புகளிலும் இடம் பெறுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டப் பேரவையின் தலைவர், தமிழ்நாடு அரசின் கீழ் அலுவல்புரியும் செயலாளர் மட்டத்திலான இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உள்ளிட்டோரின் வாகன முகப்புகளிலும் இந்த இலச்சினை இடம் பெற்றிருக்கும்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது. சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1947-1949) இருந்தபோது இந்த இலச்சினை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழ்நாட்டின் அரசு இலச்சினையாக 1949ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்தியப் பிரதமராக இருந்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இலச்சினை மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர்.கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இலச்சினை வட்ட வடிவில் காணப்படுகிறது. வட்ட வடிவ மேற்புறப்பட்டையில் தமிழ்நாடு அரசு என்றும், வட்ட அமைப்பிற்கு வெளிப்புறத்தின் கீழே ‘‘வாய்மையே வெல்லும்”எனும் குறிக்கோளுரையும் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் மையமாக தமிழர் கட்டடக்கலை, தமிழ்க் கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறும் வகையில் அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு கோபுரம் காணப்படுகிறது. இந்த கோபுரம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின், ஸ்ரீவடபத்திரசாயி பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குக் கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்படவிருந்தது.

ஆனால், ஓவியர் மதுரை மீனாட்சி கோயிலின் மேற்குக் கோபுரத்தை அடிப்படையாக வைத்து வடிவமைத்தார். அதன் கீழ்ப்புறத்தில் இந்திய தேசிய இலச்சினையில் உள்ள நான்கு சிங்க முகம் காணப்படுகிறது. இதன் பின்னணியில் இருபுறமும் இந்திய தேசியக்கொடிகள் காணப்படுகிறது. இதுபோன்று இந்திய தேசியக்கொடி வேறு எந்த மாநில இலச்சினைகளிலும் இல்லை.

Related posts

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை..!!

காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல்..!!