ஒண்ணும் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி சங்கடத்தில் நெளியும் கிண்டிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘என்ன அண்ணே… இப்படி பன்னீட்டீங்களேன்னு கதறினாங்களாமே…’’ என்று புதிர் கேள்வி ேபாட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில், காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமுகை சாலையில், செந்தூர் நகர் மற்றும் ஒன்னிபாளையம் பகுதியில் இரு போலி மதுபான ஆலைகள் இயங்கி வந்துள்ளன. இந்த ஆலை உரிமையாளர்கள் இப்பகுதி காவல்துறை அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, தப்பி வந்துள்ளனர். உள்ளூர் போலீசாரும் நீ ஓடுற மாதிரி ஓடு… நான் புடிக்கிற மாதிரி புடிக்கிறேன்… என பாவலா காட்டி வந்துள்ளனர். ஆனால், சில வாடிக்கையாளர்கள் மூலமாக இந்த விவகாரம், கேரளா போலீசார் கவனத்துக்கு சென்றுவிட்டது. இதையடுத்து, கேரளா போலீசார் தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, உள்ளூர் போலீசார் ரெய்டு நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுவிட்டது. அதிரடியாக ரெய்டு நடத்துவதுபோல் நடத்தி, ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 11 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையால் போலி மதுபான ஆலை உரிமையாளர்கள் மிரண்டு போய்விட்டனர். ‘‘என்ன அண்ணே… இப்படி பன்னீட்டீங்களே….?’’ என உள்ளூர் காவல் அதிகாரிகளிடம் கதறியுள்ளனர். இந்த விவகாரம், உள்ளூர் உளவுப்பிரிவு போலீசாருக்கும் தெரியாமல் போச்சா….? அதுவும் ‘‘டைஅப்’’…தான் என்கிறார்கள் சில நியாயமான காவலர்கள்…’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் தொகுதியில் போட்டியிட ஜகா வாங்கும் இலை கட்சியினர் பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியே இன்னும் இறுதியாகாமல் திணறும் இலை கட்சி, பல தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்வதிலும் திணறுதாம். குறிப்பா வெயிலூர் தொகுதியில் தாமரை கூட்டணியிலும், ஆளும்கட்சியிலும் வேட்பாளர் இவர்கள்தான் என்று தகவல்கள் கசிந்துவிட்ட நிலையில், இன்னமும் இலைக்கட்சியில் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்வதில் கட்சித்தலைமை திணறி வருவதாக கூறுகின்றனர் ரத்தங்கள்.

இங்கு போட்டியிட வழக்கறிஞர் ஒருவர் எப்போதும் போல விருப்ப மனு கொடுத்துள்ளாராம். அவரை போல பலரும் கொடுத்தாலும், யாருக்கும் களத்தில் நிற்க விருப்பமில்லையாம். காரணம், கோடிக்கணக்கில் செலவிட தங்களிடம் கரன்சி இல்லை என்று ஏற்கனவே கையை விரித்து விட்டார்களாம். அப்படியும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரும் எப்படியும் கட்சித் தலைமை ‘கரன்சி கட்டுகளை’ காட்டும். இங்கு நாம ஜெயிக்க போறதில்லை. அதனால, வர கட்டுல கொஞ்சமா ஒதுக்கினாலும் நமக்கு லாபம்தானே. அதனால் பார்க்கலாம் என்ற மூடில் உள்ளார்களாம்.

இதுல வித்தியாசமா குட்டி சிவகாசி பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஒருவர் தான் இவ்வளவு கட்டுகளை செலவிட தயார்னு மாஜி மந்திரிகிட்ட சொன்னாராம். அவரும் சரியென்று தலையாட்டி வைத்தாராம். தற்போது அவரும் ஜகா வாங்குவதுபோல, முன்பு சொன்ன தொகையை குறைத்து விட்டாராம். இதனால இலை கட்சியில் யார் வேட்பாளர் என்ற முணுமுணுப்பு தொடர்ந்து வருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சனாதனம் குறித்து அடிக்கடி பேசும் கிண்டிக்காரர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பொறுப்பையும், தான் வகிக்கும் பதவியையும் மறந்து அடிக்கடி பேசும் கிண்டிக்காருக்கு தென் மாவட்ட கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது, தனது மாளிகையில் நடந்த சனாதன தர்மம் புத்தக வெளியீட்டு விழாவில், திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலி என்றும், ஜியூ போப், கால்டுவெல் உள்ளிட்டோர் பள்ளிப் படிப்பை முடிக்காமல் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் கிண்டிக்காரர் வாய்க்கு வந்தபடி பேசினாராம். மக்களவைத் தேர்தல் வரும் நேரத்தில் கிண்டிக்காரரின் இந்தப் பேச்சு தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்த கிறிஸ்தவ அமைப்பினர், அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் தேவையில்லாத குழப்பத்தை கிண்டிக்காரர் ஏற்படுத்துகிறார். சட்டங்களை நிறைவேற்ற கையொப்பமிடுங்கள். அதை விட்டு விட்டு மத பிரசாரம் செய்ய ஊதியம் வழங்கவில்லை. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது. தேர்தல் காலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த இவ்வாறு பேசுகிறார். அவரது மாண்புமிக்க பதவியை துறந்து விட்டு வந்தால் ஜி.யூ போப், கால்டுவெல் ஆகியோரது படிப்பை நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என கிண்டிக்காரருக்கு சவாலும் விட்டுள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியின் நிழலானவரும் ஒரு வேட்பாளரை வச்சிருக்காராமே…’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘பாஜவை விட்டால் இலைக்கட்சிக்கு வேறு வழியே கிடையாது என நினைத்த மாஜி போலீஸ் அதிகாரிக்கு இலைக்கட்சி தலைவரின் அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்காம். அக்கட்சியை அனாதையாக்கி விட வேண்டும் என அவர் ரொம்பவே தீவிரமாக இருக்காராம். இதனால மாம்பழம், முரசு கட்சிகளை இழுத்துவிட வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியா இருக்காரு. இதற்காக இந்த ரெண்டு கட்சிகளும் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவே திகழ்ந்துவிட்டாராம் இலைக்கட்சி தலைவர்.
சீட்டுக்கு சீட்டு, செலவுக்கான துட்டுக்கு துட்டுன்னு எல்லாத்தையுமே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாராம். இதனால அவர்கள் ரெண்டுபேரும் எல்லையில்லாத மகிழ்ச்சியில இருக்காங்களாம். இலைக்கட்சி தலைவரின் மாங்கனி தொகுதிக்கு ஒரு வேட்பாளரை தயார் செஞ்சி வச்சிக்காரு. அதே நேரத்துல நிழலானவரும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சட்டம் படிச்ச வேட்பாளரை தயாரா வச்சிருக்காராம். சமீபத்தில்தான் அவருக்கு சட்டப்பிரிவுல மாநில துணை செயலாளரு பொறுப்பு கொடுத்தாங்களாம். சேலத்துல அரசு வக்கீலா பணியாற்றிய அனுபவம் கொண்ட அவரு, ஒவ்வொரு தேர்தலிலும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் வேலைய செஞ்சிட்டு வந்திருக்காரு. எனவே இலைக்கட்சி தலைவருக்கு ஒரு வேட்பாளர் இருப்பது போல கள்ளக்குறிச்சிக்கும் இந்த வேட்பாளரை நான் முன்மொழியப்போறேன்னு நிழலானவர் கட்சிக்காரங்கக்கிட்ட சொல்றாராம். நிழலானவரு கை ஓங்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்