எல்லாபுரம் ஒன்றியத்தில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிய நூலகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்தில், புத்தகங்கள் காணாமல் போனதாக கூறி மூடப்பட்ட கட்டிடத்தில் செடி கொடிகள் படர்ந்தும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாகவும் மாறி வருவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இங்கு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் அமைக்கப்பட்டது. நூலக பொறுப்பாளராக ஒரு நூலகரும் நியமிக்கப்பட்டிருந்தார். இங்கு, பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என ஏராளமானோர் தினமும் இந்த நூலகத்திற்கு வந்து புத்தகங்கள் வாசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், நூலக அதிகாரி வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனால், இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அடிக்கடி காணாமல் போனது. சில நாட்களில் நூலகமும் பூட்டப்பட்டது.

இதனை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள் நூலகம் முன்பு அமர்ந்து சூதாட்டம் ஆடுவது, மதுபானம் அருந்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: புதிதாக நூலகர் ஒருவரை நியமித்து செயல்படாத நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும், நூலக கட்டிடத்தை செடிகொடிகள் போர்வைபோல் மூடிக்கொண்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் சில சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். செயல்படாமல் பூட்டியே கிடக்கும் நூலகத்தை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.

Related posts

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!!

திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது

விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு வகைகளில் ரூ.9.75 கோடி பணம் கையாடல் : அதிமுக நிர்வாகிக்கு வலைவீச்சு