மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு


ஊட்டி: மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, காட்டு மாடுகள் மற்றும் கரடி ஆகியவை எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக அரசு பஸ் சென்று வருகிறது. இந்த சாலை மஞ்சூர் பகுதியில் இருந்து அத்திக்கடவு வரை வனப்பகுதிகளை கொண்டது.

இதனால், எப்போதும் இந்த வழித்தடத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் நேற்று மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களை காட்டு யானைகள் கூட்டம் கெத்தை பகுதியில் வழிமறித்து நின்றது. குட்டிகளுடன் இருந்த அந்த யானைக்கூட்டம் வெகு நேரம் காட்டிற்குள் செல்லாமல் சாலையிலே நின்று கொண்டிருந்தது. மேலும் அரசு பஸ்சை நோக்கி அடிக்கடி யானைகள் ஓடி வந்தது. இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து யானைகள் காட்டிற்குள் சென்றதால், மீண்டும் அரசு பஸ் கோவை நோக்கி சென்றது. அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: அமைச்சர் சாமிநாதன்

வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி கடும் கண்டனம்