3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார், தினசரி 2.23 லட்சம் மாணவர்கள் பயன் பெற உள்ளனர்

சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் 3,995 உள்ள அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் இன்றுமுதல் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 2022ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தாளான செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது.

இதன்மூலம் 1,545 பள்ளிகளை சேர்ந்த 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இதனையடுத்து, இந்த திட்டத்தின் வரவேற்பின் காரணமாக கடந்தாண்டு அக்.25ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த இடமான திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்
வரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் இந்த காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்தியாவில் முதல் முறையாக ‘காலை உணவு’ திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது முதல் மாணவர்களின் பள்ளி வருகை என்பது கணிசமாக உயர்ந்து வருகின்றது. அதன்படி, இந்த திட்டத்தை தெலுங்கானாவிலும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்