Saturday, October 5, 2024
Home » இன்று முதல் மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்: தமிழ்நாட்டில் 1 மாதம் நடக்கிறது, மின்வாரிய அதிகாரிகள் தகவல்

இன்று முதல் மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்: தமிழ்நாட்டில் 1 மாதம் நடக்கிறது, மின்வாரிய அதிகாரிகள் தகவல்

by Ranjith

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தும் கட்டணங்களைச் செலுத்தியும் பெயர்மாற்றம் செய்யலாம். எனினும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் செய்ய சிறப்பு பெயர் மாற்றம் முகாம் ஒன்றினை இன்று முதல் ஒரு மாதகாலம் நடத்த மின்வாரிய அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதற்கான கட்டணம் ரூ.726 (ரூ.615+ஜிஎஸ்டி ரூ.111) செலுத்தி இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

* வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்பவர்கள்: ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அ) விற்பனைப் பத்திரத்தின் நகல் (அ) பரிசு பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம் போன்ற ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (அ) நீதிமன்ற உத்தரவு.

* இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்பவர்கள்: உரிமை ஆவணத்தின் நகல். செட்டில்மென்ட் பத்திரம் (அ) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

* குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்பவர்கள்: பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அ) வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi