மின்வாரிய அலுவலகங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்வாரியத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாக மின்வாரிய ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் மின் தேவைக்காக இரவு, பகலாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

மின்வாரிய ஊழியர்களின் மாநிலம் தழுவிய போராட்டத்தினால் பொதுமக்களுக்கு தேவையான மின்சார சேவை பாதிக்கப்படுவதோடு, மின்வாரிய அலுவலகங்களிலும் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி போராட்டம்

ஜூலை 24: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை