மின்சார அதிர்ச்சி

ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இப்போது மின்கட்டணத்தை கையில் எடுத்து கொண்டு, பூதம் கிளம்பியுள்ளது. காசுக்கு ஏத்த தோசை கதையாய், நேரத்திற்கு ஏற்ப மின்கட்டணம் என்கிற புதிய உருட்டை நாட்டு மக்களின் காதில் ஒன்றிய அரசு ஓத தொடங்கியுள்ளது. அதாவது இந்தியா முழுவதும் மின்சாரம் உபயோகிப்பாளர்களுக்கு பீக் அவர்சில் ஒரு கட்டணமும், சாதாரண நேரங்களில் மற்றொரு கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையும் பீக் அவர்சில் மின்கட்டணம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

இக்கட்டண உயர்வு வணிக தொழில் நிறுவனங்களில் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதலும், வீடுகளுக்கு வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதலும் அமல்படுத்தப்பட உள்ளது. விவசாய மின்நுகர்வோருக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களை பொறுத்தவரை மின்பயன்பாடு எப்போதுமே காலை, மாலை நேரங்களில்தான் அதிகமிருக்கும். அரசு, தனியார் வேலைகளுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் இயந்திர கதியில் புறப்படும்போது மின்பயன்பாடும் அதிகம் இருக்கும். கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷன் என பல மின் பயன்பாடு உள்ள இயந்திரங்கள் அப்போது இயக்கப்படும். அந்த வேளையில் மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது கொடூரமானது.

தோசைக்கு மாவு அரைக்கும் ஒரு இல்லத்தரசி, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பகல் 12 மணி வரை காத்திருக்க முடியாது. நள்ளிரவில் வாசிங் மெஷினில் துணி துவைக்க முடியாது. ஆனால் இவற்றையெல்லாம் செய்து மின்சிக்கனத்தை கொண்டு வாருங்கள் என ஒன்றிய அரசு தற்போது அறிவுறுத்த தொடங்கியுள்ளது. இக்கட்டண உயர்வை வரும் ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசானது, மாநில அரசுகளுக்கு நெருக்கடியும் கொடுக்கிறது. மின்கட்டணத்தை இப்படியாக தடாலடியாக நேரத்தை கணக்கீட்டு 20 சதவீதம் உயர்த்தினால், பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்வர். தொழில்துறை நசிவடையும்.

இக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததுதான், இத்தகைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணமாகும். உதய் திட்டத்தின்படி மாநில அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒன்றிய அரசு மின் பங்கீட்டை குறைக்கும். தேவையான நிலக்கரியை தராமல் போக்கு காட்டும். நேரத்திற்கு மின்கட்டண உயர்வு என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டாலும், பொதுமக்கள் பெரிய அளவில் கவலை கொள்ளாமல் இருக்க இரு காரணங்கள் உண்டு.

ஒன்று, இக்கட்டண உயர்வு அமலுக்கு வரும்போது பாஜ அரசு ஆட்சியில் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இரண்டாவதாக இக்கட்டண உயர்வை வீட்டு நுகர்வோருக்கு அமலாக்கம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதைய மின் கட்டண ஆணைப்படி உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோருக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெளிவாக அறிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்