மின்மோட்டார் அறை இடிந்து இருவர் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலைமறியல்

*காவல் நிலையம் முற்றுகையால் ஓட்டப்பிடாரத்தில் பரபரப்பு

ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் அறை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசு வேலை கேட்டு அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனி மங்கம்மாள் சாலை பகுதி தனியார் பண்ணை தோட்டத்தில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் 4 தொழிலாளர்கள், நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் அறையின் தரைத்தளம் வலுவிழந்ததன் காரணமாக ரூமில் இருந்த மோட்டார் பெட் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியபடி தொழிலாளர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதில் தண்ணீரில் மூழ்கி வடக்கு சிந்தலக்கட்டை மரியதாஸ், வடக்கு ஆரைக்குளம் சுப்புராஜ் என்ற ஈஸ்வரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். குலசேகரநல்லூர் அரியநாயகம், கவர்னகிரி மாரிமுத்து ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், நேற்று ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தேரடி பஜாரில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூ. மாவட்ட குழு உறுப்பினர் அழகு உள்பட திரளானோர் பங்கேற்றனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

தகவலறிந்து தாசில்தார் சுரேஷ், ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன், டிஎஸ்பிக்கள் (மணியாச்சி பொறுப்பு) வெங்கடேசன், (தூத்துக்குடி ரூரல்) சுரேஷ்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் கிடைக்கவும், தோட்ட உரிமையாளரிடம் இருந்து தலா ரூ.2.50 லட்சம் இழப்பீடும் பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் அதிவிரைவு படை போலீசார் மற்றும் மணியாச்சி, தூத்துக்குடி ரூரல் சப்-டிவிஷன் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்