முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விதிகள்படியே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல், தேர்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வாக்காளர் பட்டியலில் குறைகளை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது தேர்தல் நடத்த அரசு முனைப்பு காட்டுகிறது என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வாக்காளர் பட்டியல் சட்டத்திற்கு உட்பட்டு திருத்தப்பட்டு, சரியான வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.

சட்ட விதிகளின்படி, தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஆட்சேபங்கள் பெற்று, அதை பரிசீலித்து, அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். தற்காலிக பட்டியலில் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் அல்லது இறந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சேபம் தெரிவிக்கலாம். அனைத்து ஆட்சேபங்களும் பரிசீலித்த பிறகே இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related posts

முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்

டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு