தேர்தல் விறுவிறுப்பு

நா டு முழுவதும் இப்போது வரை ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் அடிக்கல் நாட்டி வைத்து இருக்கிறார் பிரதமர் மோடி. சென்னை வெள்ளத்திற்கு வரவில்லை, நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை பார்க்கவில்லை. ஆனால், தேர்தலுக்காக அடுத்தடுத்து 5 முறை தமிழ்நாட்டிற்கு மட்டும் வருகிறார். குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை மட்டும் இந்த இரு மாதங்களில் அவர் 3 முறை சுற்றி வந்து விட்டார். எல்லாம் மக்களவை தேர்தல் படுத்தும்பாடு.

370வது பிரிவை நீக்கி விட்டோம், எனவே இந்த முறை மக்களவை தேர்தலில் பா.ஜ 370 இடங்களை பிடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்தார் பிரதமர் மோடி. ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணி அமைக்க முடியாமல் திணறுகிறது பா.ஜ. இந்த பட்டியலில் லேட்டஸ்டாக அரியானா மாநிலமும் சேர்ந்து கொண்டது.

அங்குள்ள 10 எம்பி தொகுதிகளுக்காக கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட மோதலில் முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்து விட்டார். இதனால் கூட்டணி ஆட்சி கலைந்து விட்டது. பா.ஜ தனித்து ஆட்சி அமைத்துள்ளது. புதிய முதல்வராக நயாப்சிங் சயானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலம் இல்லை என்றாலும், இதுவரை கூட்டணியில் இருந்து, துணை முதல்வர் பதவி வகித்து வந்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியை உடைத்து இருக்கிறது பா.ஜ. அரியானாவுடன் சேர்ந்து மக்களவை தேர்தலில் 199 இடங்கள் இந்த 7 மாநிலங்களிலும் உள்ளன.

இன்னும் கேரளா 20, ஆந்திரா 25, தெலங்கானா 17 எம்பி தொகுதிகள் இருக்கின்றன. இங்கெல்லாம் உள்ள செல்வாக்கு என்ன என்பது பா.ஜவுக்கே தெரியும். இருந்தாலும் மக்களை நம்ப வைக்க, மீண்டும் மோடி, பா.ஜ கூட்டணிக்கு 400 சீட் என்ற கோஷத்தை பா.ஜ முன்கூட்டியே மக்கள் முன்பு வைத்தது. ஆனால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல் ‘வேண்டாம் மோடி’ என்ற கோஷம் இப்போது நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கி இருப்பதைத்தான் அரியானாவில் நடந்த திடீர் அரசியல் மாற்றம் உணர்த்துகிறது.

நாடு முழுவதுமே மக்களவை தேர்தல் பரபரப்பில் மூழ்கி கிடக்கும் போது பா.ஜ மட்டும் அரியானாவில் முதல்வர் மாற்றத்தை செய்துள்ளது. அங்குள்ள கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு, அந்த கூட்டணி கட்சியையே கபளீகரம் செய்து விட்டு தனித்து ஆட்சி அமைக்க முயன்றுள்ளது. இந்த முறையில் தான் நாடு முழுவதும் பா.ஜ கட்சியை வளர்த்துள்ளது. ஆட்சிகளை அபகரித்து உள்ளது. இமாச்சல் மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜ ஆட்சியை அமைக்க இன்று வரை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு வரும் மக்களவை தேர்தல். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படி வெற்றிகரமாக முதன்முதலாக தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு தேர்தல் களத்திற்கு தயாராகி நிற்கிறதோ, அதே போல் நாடு முழுவதும் ஒன்றுபட்டு, உறுதியாக இணைந்து செயல்பட்டால் மோடியின் கனவு நிச்சயம் தகர்ந்து விடும். அது அவருக்கும் தெரியும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு