“ஊழல்வாதிகளின் உண்மை முகம் தெரியவரும்”….தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு!!

டெல்லி : தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளனர். தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பாத்திரங்களை ரத்து செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி : ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஒன்றிய பாஜக கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெற உச்சநீதிமன்ற தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பு. சமத்துவம், நீதி, நேர்மை, ஜனநாயகத்தின் ஒவ்வொரு விதியையும் மீறியுள்ளது தேர்தல் பத்திர திட்டம். தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 90% நிதியை பா.ஜ.க. பெற்றது என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. எந்த கட்சிக்கு, எப்போது, யார் நன்கொடை அளித்தது என்ற விவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கட்சிக்கு தேர்தல் நன்கொடை ஏன் தரப்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.

விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் : தேர்தல் கால ஆதாய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
உச்சநீதிமன்றம்.

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை : தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ரூ.6,564 கோடியை பாஜக லஞ்சமாக பெற்றுள்ளது. எந்தெந்த தொழிலதிபர்கள், அந்நிய நாட்டு சக்திகள் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரம் வெளியே வரும். ஊழல்வாதிகளின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா : வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : தேர்தல் பத்திரங்கள் ரத்து என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது.

Related posts

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி