தேர்தல் பணியில் ஈடுபட்ட விக்கிரவாண்டி திமுக நிர்வாகி மீது பாமகவினர் கொலைவெறி தாக்குதல்: போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தேர்தல் பணிமனையில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணதாசன் (30) அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின்
அண்ணாதுரை மற்றும் கந்தன் ஆகிய இருவரும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தேர்தல் பணிமனை அமைத்ததாக கூறி திடீரென கண்ணதாசனை கொலை வெறியுடன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கண்ணதாசனை அவரது உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கும் வந்து பாமகவினர் அவரை தாக்கி உள்ளனர்.சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கண்ணதாசனை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் இதுகுறித்து ஜெகத்ரட்சகன் எம்பி கூறுகையில், கண்ணதாசன் இரவு 12 மணிக்கு தேர்தல் பணிமனையில் உட்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது 10 பேர் மது அருந்திவிட்டு வந்து பாட்டிலால் தாக்கியுள்ளார்கள்.

காது, மூக்கில் ரத்தம் வந்துள்ளது. கண்ணதாசனின் தம்பி அங்கு வரவில்லை என்றால் இரவே அவரது உயிர்போயிருக்கும். மேலும், மருத்துவமனைக்கு வந்து 10 பேர் அடித்துள்ளார்கள். புகார் கொடுத்துள்ளோம். உயிர் போகும் அளவுக்கு பாமகவினர் அடித்துள்ளனர். காவல்துறை தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசில் கண்ணதாசன் புகார் அளித்தார். இதேபோன்று கண்ணதாசன் மீது அண்ணாதுரை தரப்பினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2வது முறையாக சாம்பியன் பட்டம்; இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு