தேர்தல் யுத்தம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வெட்ட வெளிச்சமான பாஜவின் தில்லுமுல்லுவால் தேர்தல் நேர்மையாக நடக்குமா? சந்தேகம் கிளப்பும் முத்தரசன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: சண்டிகர் மேயர் தேர்தலில், தலையீடு செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு தனது தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் தேர்தலை நடத்தி வைக்காமல் இழுத்து அடித்து வந்ததும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் இருந்த நிலையில், 8 வாக்குகளை தேர்தல் அதிகாரியே செல்லாது என அறிவித்து பாஜவை சேர்ந்தவரை மேயராக அறிவித்தார்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தேர்தலை ரத்து செய்து ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவரை மேயராக அறிவித்ததும், அந்த தவறு செய்த அதிகாரி மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமான மாநகராட்சி தேர்தலிலேயே இதுபோன்ற தில்லு முல்லுவில் ஈடுபடும் பாஜ அரசு, வருகிற நாடாளுமன்ற பொது தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் இதை உணர்ந்து பாஜ ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* யாருடன் கூட்டணி ? நாளை அறிவிப்பு: அமெரிக்கா மாறி தேர்தலை நடத்துங்க… சரத்குமார் திடீர் வாய்ஸ்
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் சமக தலைவர் சரத்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் குறித்த நிலைபாடு அறிவிப்பு வெளியாகும். அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. நம்பிக்கை இல்லை என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் நினைத்தால், இங்கும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தலாம். ஆங்காங்கே சிறு, சிறு சம்பவங்கள் நடைபெறுவது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஆகாது. பெரிய அளவில் மத கலவரங்கள் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் மட்டுமே சட்டம், ஒழுங்கு கெட்டுப் போவதாக அர்த்தம். விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அரசு செவி சாய்த்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் பாஜ வளர்ச்சி குறித்த அளவுகோல் என்னிடம் இல்லை. இவ்வாறு கூறினார்.

நடிகைகள் பற்றி சர்ச்சை சரத்குமார் கண்டனம்
‘நடிகைகளை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்ற கருத்து இருக்கிறது. நடிகைகள் குறித்து தவறான செய்திகள் தொடர்ந்து வெளியிடுவதை நிறுத்துவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

* பெற்ற மகனையே தனது மகனே இல்லை என்பார் ஜெயக்குமார்: டிடிவி கலாய்
சிவகங்கையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவழ்ந்து தவழ்ந்து வந்த பழனிசாமி, ஊழலுக்காகவே பிறந்த பழனிசாமி. சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி இறுதியானவுடன் தெரிவிப்பேன். சிவகங்கை மக்களவை தொகுதியில் நான் போட்டியிடுவதாக வரும் தகவல்களை கேள்விப்பட்டேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமில்லை. நிர்வாகிகள் விரும்புகின்றனர். பரிசீலித்து முடிவு செய்வேன். இன்னும் சில நாட்களில் ஜெயக்குமார், அவரது மகனை தன்னுடைய மகனே இல்லை என சொல்லுவார். இவ்வாறு கூறினார்.

* பெட்ரோல், டீசல் லாபத்தை கொள்ளையடிக்கும் பாஜ அரசு: துரை வைகோ ஆவேசம்
ராமநாதபுரத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு ஒன்றிய அரசின் திட்டத்திற்கும் உரிய பணத்தை தருவதில்லை. அரிசி விலை ஏற்றம் மற்றும் எல்லாவற்றின் விலை ஏற்றத்திற்கு மூல காரணம் எரிபொருளின் விலை ஏற்றம் தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட இன்று விலை குறைந்து விட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இந்த லாபத்தை ஒன்றிய அரசு தான் கொள்ளை அடிக்கிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசுதான். இவ்வாறு கூறினார்.

* கூட்டணிக்கு பாமக பேரம் பேசுறாங்க… போட்டு உடைத்த கே.பி.ராமலிங்கம்
தர்மபுரியில் பாஜ சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கட்சியின் மாநில துணைத்தலைவர், கேபி ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பாஜ தேர்தல் பணிகள் செய்யத்தொடங்கிவிட்டது. நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். உடனே யாரும் கூட்டணிக்கு வரவில்லையா என்று கேட்காதீர்கள் வடசென்னை முதல் கன்னியாகுமரி வரை பாஜவின் தாமரை சின்னம் போட்டியிட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். மற்ற கட்சிகளின் சின்னத்திற்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுக்கவா பாஜ உழைத்துக்கொண்டு இருக்கிறோம். சில கட்சிகள் கூட்டணி குறித்து 7, 5 சீட்டு என பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பேச்சுவாத்தை நடத்துகிறார்களா, பேரம் பேசுகிறார்களா? என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பாமக கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘அவர்கள் பேரம் பேசி முடித்துவிட்டு வரட்டும். பாஜ கூட்டணிக்கு நேரடியாக வருகிறோம் என்று அவர்கள் கூறிவிட்டு எங்களிடம் வரட்டும்’ என்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை