மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் தேர்தல்


புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் பிரச்சனையில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபுள்யூ.எஃப்.ஐ) தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தபஸ் பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது ஒரு சிறுமி உட்பட ஏழு முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.

அந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர்கள். எனவே ஜூலை மாதம் நடக்க இருந்த தேர்தலை நிறுத்தி வைக்க பஞ்சாப், அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டது. டபுள்யூ.எஃப்.ஐ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகமும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உரிமத்தை ரத்து செய்தது. எனவே, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த பூபேந்திர சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறது. அதனால் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட சர்வதேச போட்டிகளில் இந்தியா சாராத பொதுவான வீரர்களாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்த பஞ்சாப் அரியானா நீதிமன்றம் விதித்திருந்த தடையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் நீக்கியது.

அது தொடர்பான விசாரணையில் தேர்தல் அதிகாரி தபாஸ் பட்டாச்சாரியார் டிச.8ம் தேதி அல்லது 5 நாட்களுக்குள் புதிய தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். அதன்படி ஓரிரு நாட்களில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் அதன் பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்த பின் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விதித்த தடையை திரும்பப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது