தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் சுருட்டல் எச்.ராஜா முன்னிலையில் பாஜ நிர்வாகிகள் அடிதடி

வேலூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தனர். இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளும், மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது புகார்களும் பாஜ தலைமையிடம் குவிந்தன. இந்நிலையில் படுதோல்வி குறித்து பாராளுமன்ற தொகுதி வாரியாக பாஜ மூத்த நிர்வாகிகள் நேரடியாக மாவட்ட அளவில் சென்று நிர்வாகிகளுடன் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஆய்வுக்கூட்டம் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, வேலூர் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக கூட்டம் நடந்தது. இதில் கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடந்த கூட்டத்தில் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணம் எங்கே? என்பது குறித்து இரு நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கிடையே திடீரென கைகலப்பானது.அப்போது அங்கிருந்த பாஜ நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்