இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆய்வு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது?: இன்று நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். தேர்தல் பணிகள் குறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்று 2வது நாள், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எந்த தேதியில் நடத்துவது என்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலம்தோறும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த ஏற்பாடு பணிகளை, நேரடியாக ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் கடந்த டிசம்பர் 8ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை 3 நாள், சென்னையில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், புயல் பாதிப்பு காரணமாக அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் அறிவிப்பு மற்றும் அந்தந்த மாநிலங்களில் ஏப்ரல் மாதம் நடைபெறும் பள்ளி இறுதி தேர்வுகள், முக்கிய பண்டிகைகள் குறித்து அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படுவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னெற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்திய தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று காலை 10.40 மணிக்கு சென்னை வந்தனர். அவர்களை தமிழக தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை, தலைமை செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வருமானவரித் துறை, காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய் புலனாய்வு துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் வழக்கமாக ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருவதால், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று 2வது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, நாடாளுமன்ற தேர்தலையொட்டி எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ மற்றும் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு, முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோன்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளனர். தமிழகத்தில், இரண்டு நாள் ஆலோசனையை முடித்துக் கொண்டு இன்று இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்றும், இன்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் மற்றும் வருமான வரி துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை விவரங்களை டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அதன் அடிப்படையில், தமிழகத்தில் எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது என்றும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு

மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி