தேர்தல் யுத்தம்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் என 40 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் வித்தியாசமானது. தேர்தல் தேதி அறிவித்த 5 வாரத்துக்குள் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு இறுதி பட்டியல் அறிவிப்புக்கு பின் 18 நாட்கள்தான் பிரசாரம். சுவர் விளம்பரங்கள், கிராமப்புறங்களில் கூட காண முடியவில்லை. இதுவரை கூட்டணி கட்சி அளவில் தான் வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுபோன்று அதிமுக, பாஜ கூட்டணி கட்சிகளும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் ஐந்து முறை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது 6வது முறையாக வருகிற 9ம் தேதி சென்னை வருகிறார். இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நடக்கும் யுத்தமாக இந்த தேர்தல் கருதப்படுகிறது. மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேசத்தில் தேர்தலே நடக்காது. ரஷ்யா, சீனாவில் என்ன நடந்ததோ அதை நோக்கி தேசம் செல்லும். தேசத்தில் ஒரு கட்சி, ஒரு கொள்கை, விதிமுறைகள் மட்டுமே இருக்கும், யார் குடியரசு தலைவராக வர வேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்று முடிவு செய்வார்கள் என்ற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால், பாஜ தலைவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இல்லை.

எதிர்க்கட்சியினர் யாரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. சகிப்புத்தன்மை என்பதே அவர்களின் மரபணுவில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில், பெட்ரோல் மீதான வரி உயர்வு 200 சதவீதத்துக்கும், டீசல் விலை 7 மடங்கும் உயர்ந்துள்ளது. காஸ் கட்டணம் கடுமையாக உயர்ந்து பெண்களுக்கு சுமையாக மாறிவிட்டது. பாஜ ஆட்சியில் அதானி உள்ளிட்ட பெரும் முதலாளிகளின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதுபோன்று பாஜ கூட்டணி கட்சிகள், மாநில கட்சிகளை குறைகூறுவதை தவிர பத்து ஆண்டில் இந்தியாவில் நடந்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முடியவில்லை.

மாறாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான நிதியை குறைப்பது, ஜார்கண்ட்டை தொடர்ந்து டெல்லி முதல்வரை தனது ஏவல் துறையின் மூலம் பாஜ அரசு கைது செய்வது போன்று பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஏப்.1 நள்ளிரவு முதல் கடுமையாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மக்கள், சுங்க கட்டணம் உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும் என அஞ்சினர். இந்த பிரச்னை, தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் கடைசி நேரத்தில் இந்த முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தை மீட்க போராடும் இந்தியா கூட்டணிக்கும், சர்வாதிகாரத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் பாஜ அரசுக்கும் இடையே நடக்கும் தேர்தல் யுத்தமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு