இது உங்களை பற்றிய தேர்தல் அல்ல தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மக்கள் பிரச்னையை பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

துருவகெரே: ‘கர்நாடக தேர்தல் பிரதமர் மோடியை பற்றிய தேர்தல் அல்ல. பிரசாரத்தில் கர்நாடக மக்கள் பிரச்னை பேசுங்கள்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார். கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி துமகூரு மாவட்டம் துருவகெரேயில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: கர்நாடக தேர்தல் இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்கானது. ஒரு தனிமனிதருக்கானது அல்ல. கர்நாடக தேர்தல் என்பது பிரதமர் மோடிக்கானது கிடையாது. அவரை பற்றிய தேர்தல் கிடையாது. அவர் கர்நாடகாவில் பாஜ அரசு கடந்த 3 ஆண்டுகளில் என்ன செய்துள்ளது. எதிர்கால திட்டங்கள் என்ன என்பது குறித்து மக்களுக்கு சொல்வதை தவிர்த்து தன்னைப்பற்றியே பேசிக்கொள்கிறார். கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி மாநிலத்தை பற்றி பேசாமல், அவர் குறித்தே பேசுகிறார்.

இளைஞர்களுக்கு, கல்வி, சுகாதாரம், ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து அவர் பேசுவதில்லை. கர்நாடக மக்கள் மற்றும் அவர்களது எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை. காங்கிரஸ் 91 முறை அவதூறு செய்துள்ளது என்று கூறுகிறார். ஆனால் கர்நாடகாவில் பாஜ மக்களுக்கு என்ன செய்துள்ளது என்று பேசுவதில்லை. அடுத்த பிரசார உரையிலாவது, பாஜ ஆட்சியில் கர்நாடக மக்கள் என்ன பயன் அடைந்தார்கள். அடுத்த 5 ஆண்டில் என்ன செய்ய இருக்கிறீர்கள் என்பது குறித்து அவர் பேசட்டும்.

நான் தேர்தல் பிரசாரத்தில் எங்கள் கட்சி தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் மாநிலத்துக்காக என்ன செய்தார்கள் என்று பேசுகிறேன். ஆனால் பிரதமர் மோடி, தனது கட்சி தலைவர்கள் ெபயர்களை குறிப்பிடுவதே இல்லை. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ெபயரை கூட அவர் சொல்வதில்லை. உங்கள் பேச்சு அனைத்தும் உங்கள் ஒருவரை சுற்றியே இருக்கிறது. பொம்மை, எடியூரப்பா பெயரை இனியாவது ஓரிரு முறை சொல்ல முயற்சி செய்யுங்கள். அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். கர்நாடக பாஜ ஆட்சியின் 40 சதவீத ஊழல் குறித்து பிரதமருக்கு தெரியாதா? ஏன் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது பற்றி கர்நாடக மக்களுக்கு பதில் சொல்லுங்கள். வரிப்பணத்தை எப்படி கர்நாடக மாநில மக்களுக்கு செலவழித்தீர்கள் என்று பதில் சொல்ல பிரதமர் மோடி தயாரா? இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

காவிரியில் உரிய நீரை பெற உடனடி நடவடிக்கை தேவை: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!