தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் எதிரொலி : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு; ரூபாயின் மதிப்பும் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!!

மும்பை : மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பான கருத்து கணிப்பு முடிவுகள் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்துள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.00 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதையடுத்து பல்வேறு ஊடகங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடகங்கள் அதில் கூறி இருந்தன. இதில் சாதகமான யூகங்களால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன.

வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2750 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய உச்சமாக 76,700 ஆக பதிவாகி இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,300 ஆக காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்துடன் ஒப்பிட்டால் சென்செக்ஸ் 4% அதிகரித்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் இன்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9% உயர்வை கண்டுள்ளன. பவர் கிரிட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, என்டிபிசி, பிபிசிஎல், ONGC பங்குகளும் உயர்வை சந்தித்துள்ளன. இதனிடையே நாளை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பங்கு சந்தைகளின் போக்கில் மேலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு