தேர்தல் களம் விறுவிறு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல் கட்டம் என்பதால் தமிழகத்தில் தேர்தல் பணிகளை வழக்கத்திற்கு மாறான விறுவிறுப்புடன் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. திமுகவை தவிர பிற கட்சிகள் கூட்டணி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சென்று கட்சியையே இணைத்த கூத்தும் கூட நிலவியது. முதல் நாள் இரவு வரை அதிமுக கூட்டணி பக்கம்தான் சாயும் என்ற நிலையில், மறுநாள் பாஜ கூட்டணிக்கு தாவியது பாமக. இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை தந்தாலும் தேமுதிக உட்பட சில கட்சிகளோடு இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் கடந்த 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அன்றைய தினம் மட்டும் அதிகபட்சமாக 405 பேர் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. கடைசி நாளான நேற்று திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். தொடர்ந்து நாளை(மார்ச் 29), 30ம் தேதி மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். 30ம் தேதி போட்டியிட உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  கடைசி நேர கூட்டணி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இம்முறை தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, பாஜ என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சூறாவளி வேக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் இம்முறை தமிழகத்தில் பல ஆச்சரியங்கள் நிலவுகின்றன. போடி எம்எல்ஏவான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் எம்பி தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இந்த போட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 5 பன்னீர்செல்வங்கள் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக படையெடுப்பது தேர்தலையே அதகளமாக்கியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல், சதியென ஓபிஎஸ் தரப்பு குற்றம் சுமத்தினாலும், தேர்தலை வைத்தும் ஒரு அரசியல் நடப்பதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவரைப்போலவே, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். மேலும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி மனைவி சவுமியா ஆகியோரும் களத்தில் குதிப்பதால், இம்முறை தமிழகத்தில் வெயில் மட்டுமல்ல… தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 21 நாட்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அடுத்தடுத்து வர உள்ள நாட்களில் தமிழகத்தில் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரசாரம் இன்னும் வேகமெடுக்கும். தேர்தல் களை கட்டத்தொடங்கும். இறுதியில் ஏப்.19ம் தேதி ஒரு விரல் புரட்சி செய்து நம் ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு