தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என கேட்டால் தெறித்து ஓடும் இலைக்கட்சி முன்னணி தலைவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சி தலைவர் மீதான வழக்கு எந்தநேரத்திலும் விசாரணைக்கு வரும்னு இலவுகாத்த கிளியா வழக்கு போட்டவர் காத்திருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சேலத்து தலைவர், தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் எதற்கும் அஞ்சாதவராக இருக்காராம். இப்படித்தான் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக தேனியை சேர்ந்த மிலானி என்கிற வாக்காளர் சேலம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தாராம். அந்த வழக்கை விசாரிச்ச கோர்ட், சிசிபி போலீசுக்கு அனுப்பி விசாரிக்க சொல்லியிருக்கு. என்கொயரி செஞ்ச போலீசு, சேலத்துக்காரர் மீது எப்ஐஆர் போட்டதோடு மட்டுமல்லாது, வழக்கு போடுவதற்கான முகாந்திரம் இருக்குன்னும் சொல்லிட்டாங்களாம். இதனால ரொம்பவே ஷாக்கான சேலத்துக்காரர், விசாரணைக்கு உடனே ஐகோர்ட்டில் தடையும் வாங்கிட்டாராம். வழக்கமா இதுபோன்ற தடை வாங்கினால் 6 மாதத்திற்குள் தானாகவே அந்த தடை நீங்கிடுமாம். என்றாலும் தடைபோட்டு 9 மாசம் ஆகிப்போச்சாம். தற்போதுள்ள சூழ்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீவிரமா இருக்காம். அதேபோல, இலைக்கட்சி தலைவர் மீது தான் தொடர்ந்த வழக்கும் எந்நேரத்திலும் விசாரணைக்கு வருமுன்னு வழக்கு போட்டவர் இலவு காத்த கிளியா காத்திருக்காராம்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னமம்மி ஆதரவாளர்களின் ஆசை நிறைவேறுமா…’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி நான்காக உடைந்த நிலையில் குக்கர்காரர் தனிக்கட்சியை தொடங்கிட்டாரு. சேலத்துக்காரரோ நான் தான் இலைக்கட்சியின் ஒப்பற்ற தலைவன்னு பொதுக்குழு கூட்டத்தை கூட்டிக்கிட்டாரு. இல்லை இல்லை நான் தான் ஒருங்கிணைப்பாளருன்னு தேனிக்காரர் சொல்லிக்கிட்டிருக்காரு. அதே நேரத்துல சின்னமம்மியோ நான் தான் இலைக்கட்சியின் பொதுச்செயலாளருன்னு கோர்ட்டு படியேறி தீர்ப்புக்காக காத்துக்கிடக்கார். இப்படி ஆளாளுக்கு இலைக்கட்சிக்கு சொந்தம் கொண்டாடிக்கிட்டிருக்கிற நேரத்துல, டெல்லி தாமரையோ எல்லோரும் எமக்கடிமைன்னு சொல்றாங்களாம். இப்படியாக நிலைமை தடுமாறிக் கிட்டிருக்கும் நேரத்துல சின்னமம்மிக்கே வெற்றின்னு அவரது அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க. மம்மி ஆட்சிக்காலத்தில் கவர்மெண்ட், பொலிட்டிக்கல் ஆகியவற்றை கரைத்துகுடித்தவர் சின்னமம்மி. எல்லா பவரையும் பார்த்தவர். ஆனால் சேலத்துக்காரர் தன்னை அவதூறாக பேசியும் எந்த ரியாக்சனையும் காட்ட வில்லை. எப்படியாவது பிரிந்து கிடப்போரை ஒன்றாக்கி விடவேண்டும் என்பதுதான் அவரது ஒரே லட்சியம். அப்படி ஒன்றாக வேண்டுமானால் சின்னமம்மியே கட்சிக்கு தலைவராக வரவேண்டும். இதற்கு தாமரை டெல்லி ஒப்புக்கொண்டு விட்டது. விரைவில் நல்ல செய்தி வரும். இலைக்கட்சி தொண்டர்கள் எல்லோரது விருப்பமும் அப்படித்தான் இருக்கு. சேலத்துத்தலைவரை பார்த்து ஒன்றாகணுமுன்னு கேள்வியும் கேட்டுட்டாங்க. அவரும் பொறுமையா இருக்க சொல்லியிருக்காரு. இதனால எல்லோரும் ஒன்றாக கூடுவோமுன்னு சின்னமம்மியின் ஆதரவாளர்கள் அடிச்சி சொல்றாங்க. ஆனா சின்னமம்மி சிஎம் சீட்டுல உட்காரப்போனதை சகித்துக்கொள்ளாமல் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறைக்கு டெல்லி தாமரை கொண்டு சென்றதை சின்னமம்மியின் அடிப்பொடிகள் மறந்துட்டாங்களேன்னு சேலத்துத்தலைவரின் அடிப்பொடிகள் சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க….’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிண்டு முடியும் அதிகாரியால் அதிருப்தியில் இருக்காராமே புல்லட்சாமி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘250 ஆண்டுகால ராஜ்நிவாஸ் இடமாற்றும் விவகாரத்தில் பெல் அதிகாரியின் பேச்சை கேட்டுத்தான் தமிழிசை முடிவு மாற்றி, மாற்றி எடுக்கிறாராம். புல்லட்சாமியின் பரிந்துரையின் பேரில் ஒரு இடத்தை தேர்வு செய்து கோப்பு அனுப்பப்பட்டதாம், ஆனால் அந்த இடத்தை பவர்புல்பெண்மணியும் கிட்டதட்ட ஓகே செய்துவிட்டாராம். ஆனால் அந்த பெல் அதிகாரி, அதெல்லாம் வேண்டாம், புதிதாக கட்டப்பட்ட மேரி கட்டிடத்தையும், தங்குவதற்கு ஜட்ஜ் கெஸ்ட் அவுசை கேட்போம் எனக்கூறி பவர்புல் பெண்மணியின் முடிவை மாற்ற வைத்துவிட்டாராம். அதோடு மேரி கட்டிடத்தையும், ஜட்ஜ் கெஸ்ட் அவுசையும் கொடுக்கும் எண்ணம் புல்லட்சாமிக்கு இல்லையாம். இதனை தெரிந்து கொண்டே பெல் அதிகாரி வேண்டுமென்றே அதே இடத்தை பவர்புல் பெண்மணி மூலம் கேட்க வைத்து சிண்டு முடியும் வேலை பார்க்கிறாராம். ஏற்கனவே இந்த பெல் அதிகாரியின் செயல்பாடுகளால் புல்லட்சாமிக்கு கடும் அதிருப்தியாம், அவரது இலாகாவை மாற்ற வேண்டும் என பவர்புல் பெண்மணியை நேரில் சந்தித்து கேட்டாராம். ஆனால் பெல் அதிகாரியை தவிர்த்து மற்றவர்களுக்கு இலாகாவை மாற்றிவிடலாம் என சொல்லியிருக்கிறார். பெல் அதிகாரி மீது பவர்புல்பெண்மணி ஆதரவாக இருப்பது ஏன்? என புல்லட்சாமி வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார். இது குறித்து அரசு வட்டாரத்தில் கேட்டபோது, புல்லட்சாமியின் கூடவே இருக்கும் நல்லவனுக்கு மட்டும் இவ்வளவு இலாகா வைத்திருப்பது புல்லட்சாமியின் கண்ணுக்கு தெரியவில்லை. பெல் அதிகாரி மட்டும் அவர் கண்ணுக்கு தெரிகிறாரா என்ற குரலும் கேட்கிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியினர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடுவதற்கு காரணம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எல்லா கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், இலைக்கட்சியில் மட்டும் வேட்பாளர்களை தேர்வு செய்வது பெரும் போராட்டமாக உள்ளது. எப்படி இருந்தாலும் ‘20 சி’ இல்லாமல் இத்தேர்தலில் களம் இறங்க முடியாது…. அப்படி இறங்கினாலும், ஜெயித்தால்தான் இந்த தொகையை ‘ரிட்டன்’ எடுக்க முடியும். இல்லையேல், உண்டியலில் போட்ட கதையாகி விடுமே… எனக்கருதி முன்னணி தலைவர்களாக உள்ள பலர், தெறித்து ஓடுகின்றனர். வழக்கமாக, கட்சியின் மேலிடத்தில் இருந்து ஏதாவது ஒரு தொகை கொடுப்பார்களாம்… பெரியம்மா… சின்னம்மா… காலத்தில் இது நடைமுறையில் இருந்ததாம். ஆனால், இப்போது கட்சியின் மேலிடத்தை யாரும் எதிர்பார்க்கக்கூடாது… அவர்களாகவே தேர்தல் செலவினங்களை சமாளித்துக்கொள்ள வேண்டும் என வாய்மொழியாக கூறிவிட்டார்களாம்.. அதனால், வேட்பாளர் கனவில் இருந்த பலர், அந்த முயற்சியை கைவிட்டுவிட்டனர். குறிப்பாக, கோவையில் இலைக்கட்சி இளைஞர் அணி பொறுப்பில் உள்ள ஒரு பொறியாளர் எப்படியாவது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என மிக தீவிரம் காட்டி வந்தார். ஆனால், தற்போது ஜகா… வாங்கிவிட்டதால், கட்சியின் அடிப்பொடிகள் எல்லாம் கடும் விரக்தியில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!