நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள்: இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 3 நாட்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலய் மாலிக் முன்னிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்நாளில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாவது நாள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்தயாரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடந்தது. பின்னர் நிருபர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, ‘தமிழகத்தில் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இணை தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளான எச்.எஸ்.ஸ்ரீகாந்த் (தஞ்சாவூர், கூடுதல் கலெக்டர்), பி.அரவிந்தன் (மாவட்ட வருவாய் அலுவலர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்