தேர்தல் நடத்தை விதிமுறையால் வரத்து குறைவு திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை

*ஆந்திராவின் ‘ஜமுனா பரியா’ ரூ.42 ஆயிரத்திற்கு விலை போனது

திருப்புவனம் : தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் திருப்புவனம் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தன. இருப்பினும் சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஆட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்திலேயே இந்த சந்தையில்தான் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனையாகிறது. சிவராத்திரி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சமயங்களில் சந்தை களை கட்டும். குறைந்தபட்சம் 1,000 ஆடுகள் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்புவனத்தில் நேற்று ஆட்டுச்சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஆந்திரா மாநில ஜமுனா பரியா ஆடு வியாபாரிகளை கவர்ந்தது. மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த விவசாயி வளர்த்த 40 கிலோ எடை கொண்ட இந்த ஜமுனா பரியா ரூ.42 ஆயிரத்திற்கு விலை போனது. இதுபோன்று நாட்டுக்கோழி, சேவல் ரூ.1,000 முதல் 1500 வரையும், 5 கிலோ எடை கொண்ட வான்கோழி ரூ.7,500க்கும் விற்பனையானது. சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தன. இதனால் விலை அதிகமாக இருந்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையானது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட முடியவில்லை. மேய்ச்சல் நிலங்களிலும் புற்கள் இல்லை. தேர்தல் நடத்த விதிமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரிகள் வரவில்லை. 5,000 ஆடுகள் விற்பனையான சந்தைக்கு காலையிலிருந்து 2 ஆயிரம் ஆடுகள் கூட வரவில்லை. ரம்ஜான் சந்தை போல் இல்லை. சந்தையே களையிழந்தது’’ என்றார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!