தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய பிரதமர் மோடி இந்திய ஸ்டேட் வங்கிக்கு உத்திரவிட வேண்டும்: முத்தரசன்

சென்னை: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய பிரதமர் மோடி இந்திய ஸ்டேட் வங்கிக்கு உத்திரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, தேர்தல் பத்திரம் என்னும் பெயரில் பெயர் இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்த அனைத்து விவரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்குமாறு இந்திய ஸ்டேட் வங்கிக்கு, ஒன்றிய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் கே நாராயணா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் படி உருவாக்கப்பட்ட அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு, அதன் துணை நிறுவனமான இந்திய ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டிய பொறுப்புள்ளது.மார்ச் 6 ஆம் தேதிக்குள் தரவுகளை சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, ஆனால் அது ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கோருகிறது. வங்கியில் அனைத்து பண பரிமாற்றங்களும் டிஜிட்டல் வழியாகவே நடைபெறுகின்றன. முன்பு போல் பதிவேடுகளில், கையால் எழுதப்படுவது இல்லை.

தேர்தல் பத்திர பண பரிமாற்றம் தொடர்பான விவரங்களை ஒரு நாளில் அல்ல; சில நிமிடங்களில் திறந்து பார்த்து விட முடியும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை, எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தேர்தல் பத்திரம் மூலம் வந்தது என்பதை, நாட்டுக்குத் தெரிவிக்காமலேயே மறைக்கும் முயற்சியே இது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளுங்கட்சியான பாஜக மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதத்தை பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

அவர் மோடி சொல்வதற்கெல்லாம் “ஆமாம் போடுபவர்” என்று நன்கு அறியப்பட்டவர். ரிசர்வ் வங்கியின் தலைவரின் அனுமதியின்றி, இந்திய ஸ்டேட் வங்கி கால அவகாசம் கோரி நீதித்துறையின் கதவுகளைத் தட்ட முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்புகளை வழங்கினாலும், அரசியல் சாசன அமைப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கின்றன. எனவே, பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாகத் தலையிட்டு, தரவுகளை சமர்ப்பிப்பதில் கால அவகாசத்தை நீட்டிக்க கோரும் மனுவை திரும்பப் பெற இந்திய ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், பிரதமரின் மௌனம் காப்பதின் பொருள் என்ன என மக்கள் புரிந்துகொள்வார்கள்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை