வயதானவர்கள் பாஜவில் சேர்ப்பு என கேள்வி: வீட்டில் பாட்டி, தாத்தா யாரும் இல்லையா? வானதியின் அசர வைத்த பதில்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலில் கருத்துக்கு கருத்து தெரிவிப்பது ஜனநாயக நடைமுறை. ஆனால், தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கக்கூடாது. கூட்டணி குறித்த தெளிவான முடிவு வரும்வரை, தேவையற்ற பேச்சுக்களை அதிமுகவினர் தவிர்ப்பது நல்லது. தமிழகத்தில் பாஜ புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக மாறி வருகிறது. பாஜவையும், பிரதமர் மோடியையும் எதிர்த்தவர்கள் இன்று பாஜவில் இணைந்து வருகிறார்கள். பாஜவில் சேருகிறவர்கள் எந்த வயதினர் என்பது முக்கியம் அல்ல. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு கொடுக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் வயனதானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குற்றம் சுமத்துகிற நபர்கள் வீட்டில் பாட்டி, தாத்தா யாரும் இல்லையா? அவர்கள் எல்லோரும் செயலற்றவர்களா? வயதை காரணம் காட்டி, யாரையும் இழிவாக பேசாதீர்கள். தேர்தல் நெருங்கிவிட்டால், கருத்து கணிப்புகள் பலவாறு வரும். அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

* நாங்க வயசானவங்கனா மாஜி அமைச்சர்கள்லாம் இளமையானவர்களா? முன்னாள் எம்எல்ஏக்கள் ஆவேசம்
டெல்லியில் பாஜவில் இணைந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி, ரத்தினம், செல்வி முருகேசன் ஆகியோர் நேற்று விமானம் மூலம் கோவை வந்தனர். அப்போது சேலஞ்சர்துரை, சின்னசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆட்சி பல ஆண்டுகள் தொடரும். அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. எங்களை பார்த்து, வயதானவர்கள் பாஜவுக்கு சென்றுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அப்படியானால், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா? இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு