முதியோர், கைம்பெண்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.1000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும், மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.5500 கோடி மட்டுமே செலவிடும் நிலையில், ஆந்திரத்தில் நான்கு மடங்கு அதிகமாக ரூ.23,556 கோடி செலவிடப்படுகிறது.

ஆந்திரத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் 66 விழுக்காட்டினருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் குறைந்தது 1.35 கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் 75 லட்சம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை 1.05 கோடியாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாதம் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பிரிவினர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து சமூக நீதி வழங்க வேண்டும்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை