முழங்கை வலி காரணமும் – தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர் துரை.நீலகண்டன்

நமது உடலில் தோள்பட்டை வலிக்கு பிறகு அதிகமான வலி வருபவைகளில் ஒன்று முழங்கையில் ஏற்படும் வலியாகும். முன்கையின் பின்பக்க தசைகளை அதிகளவு பயன்படுத்துவதால் முழங்கையின் வெளிப்பகுதி இணைப்பு திசுவில் ஏற்படும் அழற்சியினால் வலி உண்டாகிறது. பூப்பந்து விளையாடுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், டென்னிஸ் எல்போ (முழங்கை வலி) என்ற பெயரே நிலைத்துவிட்டது. இதற்கு முழங்கை மூட்டெலும்பு அழற்சி (Lateral epicondylitis) என்று சொல்லப்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது.. அதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இது குறிப்பாக நடுத்தர வயது அதாவது 30 முதல் 50 வயது உடையோர், விளையாட்டு வீரர்கள் குறிப்பாக பூப்பந்து, இறகுப் பந்து, வில் வித்தை, எடை தூக்குதல், வட்டு எறிதல், குத்துச்சண்டை, முன்கையை அதிகமாகப் பயன்படுத்தும் வேலை செய்வோர் குறிப்பாக தச்சுவேலை, தட்டச்சு, வர்ணம் பூசுபவர்கள், ஓவியம் தீட்டுபவர்கள், ஆடைகளை கையினால் துவைப்பவர்கள், கொத்தனார் போன்ற வேலைகளை செய்வோர், கணிப்பொறி சுட்டி ( கம்ப்யூட்டர் மவுஸ்) அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் போன்றோர் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

காரணங்கள்

முழங்கை வலி பெரும்பாலும் திடீரென ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்கை தசையின் அதிக இயக்கத்தால் முழங்கை இணைப்புத் திசுவின் நார்கள் கிழிந்து அழற்சி ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. சில சமயம் முழங்கையின் வெளிப்பக்க எலும்பு இணைப்புத் திசு அடிபட்டாலும் வலி ஏற்படலாம்.மேலே குறிப்பிட்டவாறு சில வேலைகளை வேகமாகவும், தொடர்ச்சியாகவும் செய்யும்போது முழங்கைப் பகுதியை இணைக்கும் தசை மற்றும் இணைப்புத் திசுக்கள் தேசமடைந்து முழங்கை வலி உண்டாகிறது. சிலசமயம் முன்கை, தோள்பட்டை மற்றும் விரல்களுக்குக் கூட வலி பரவும்.

சிலசமயம் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் முழங்கை மற்றும் மணிக்கட்டு மூட்டுகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் முழங்கை வலி உண்டாகிறது. பெரும்பாலும் முழங்கை வலி குறிப்பிட்ட வேலையைச் செய்வதனால் ஏற்பட்டாலும் வலியின் தன்மை வயதைப் பொறுத்து மாறவே செய்கிறது. 50 வயதைத் தாண்டியவர்களுக்கு திசுக்களின் தேய்மானத்தால் வலி மிக அதிகமாக ஏற்படலாம். இதனால் வலி ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே வேலையைக் குறைத்துக் கொண்டால் திசுக்கள் கெட்டுப் போவதையும் தேய்மானத்தையும் குறைத்து வலியைத் தடுக்க முடியும்.

அறிகுறிகள்

முழங்கையின் வெளிப்பகுதியில் வலிவிளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட விளையாட்டில் வலியை உணர்தல்

வலி முழங்கையிலிருந்து முன்கை மற்றும் மணிக்கட்டு வரை பரவுதல்

வலியினால் சிலசமயம் கதவினைத் திறக்க முடியாமலும், பொருட்களைப் பிடிக்க முடியாமலும் அவதிப்படுவது குடும்பப் பெண்கள் துணிகளைப் பிழிய முடியாமலும், செம்பு தண்ணீரைக் கூட எடுக்க முடியாமலும் அவதிப்படுவது.

பரிசோதனையும் சிகிச்சையும்

நோயாளி கூறும் வலியின் தன்மை மற்றும் வலி உண்டாகும் இடம் ஆகியவற்றை வைத்து முழங்கை வலியை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மேலும் சில பரிசோதனைகளை செய்தும் அறியலாம்.

எக்ஸ்ரே படம் எடுப்பதன் மூலம் முழங்கை வலியை உறுதிப்படுத்திக் கொள்வதோடு வேறு ஏதாவது காரணங்கள் அதாவது எலும்பு முறிவு அல்லது மூட்டு தேய்மானம் போன்றவற்றை அறியலாம்.

சில சமயங்களில் அல்ட்ராசோனோகிராஃபி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படலாம்.

சிகிச்சை முறைகள்

முழங்கை வலியைப் பொறுத்தவரை மற்ற மூட்டு வலிகளைப் போல வரும்முன் தடுப்பதே சிறந்தது. முறையாகப் பயிற்சி பெற்று விளையாட வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்யும்போது தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். முழங்கை மற்றும் மணிக்கட்டு தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.சிலசமயம் எந்தவித சிகிச்சையும் இன்றி ஆறு மாதங்களில் தானாகவே முழங்கைவலி குறைந்துவிடும். பலசமயம், சிகிச்சை பெறாமல் நீண்ட நாள் வலியாக மாறி வாழ்க்கைத் தரம் குறையவும் வாய்ப்புள்ளது.

முழங்கை வலி வராமல் தடுக்க

விளையாடும் நேரத்தை வலி வந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து உடலை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும்.முன் கை மற்றும் மேல் கை தசைகளைத் திடப்படுத்தும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் முழங்கை வலுவாக இருப்பதோடு வலி வராமல் தடுக்கலாம். வேலைகளைச் செய்யும்போது அடிக்கடி பொருட்களை இழுத்தல் அல்லது வீசுதல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Related posts

புற்றுநோயோடு போராடிய மருத்துவர்!

தொண்டைப் புண் குணமாக எளிய வழிகள்!

நடிகர் விக்ரம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!